வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (07/04/2018)

கடைசி தொடர்பு:12:52 (07/04/2018)

அனுமதியில்லாமல் இயங்கும் தூத்துக்குடி துறைமுகம்: 4 துறைகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

துாத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதி இல்லாமல், இயங்கும் துறைமுக கழகத்துக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நான்கு துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகம்: 4 துறைகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

திருநெல்வேலி மாவட்டம், சங்கர்நகரைச் சேர்ந்த முத்துராமன் என்பவர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகவும், அதைத் தடைசெய்ய வேண்டும் எனவும் கூறி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ``2015-ம் மார்ச் மாதம் துறைமுக கழகம் இயங்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி முடிந்துவிட்டது. அதன் பின், இந்த அமைதியை அவர்கள் புதுப்பிக்கவில்லை. இதேபோல், அனுமதிக்கப்பட்ட  சரக்கு கையாளுகையை மீறி அதிகப்படியான சரக்கு கையாளுகையை உரிய அனுமதி இல்லாமல், தன்னிச்சையாக உயர்த்திக் கொண்டனர். இதற்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்கவில்லை.

அனுமதி இல்லாமலேயே, வடக்கு சரக்கு கையாளும் தளம், மூன்றை விரிவாக்கம் செய்துள்ளனர். இதேபோல், 2013-ம் ஆண்டு, உரிய  அனுமதி இல்லாமல் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலைக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதி இல்லாமல், இயங்கும் துறைமுக கழகத்துக்கும் அபராதம் விதித்து, தடை செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, நிஷா பானு இருநபர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்ச செயலர், மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செயலர், துாத்துக்குடி துறைமுகப் பொறுப்பு கழகத் தலைவர் ஆகியோருக்கு ஒரு வாரக் காலத்துக்குள்  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மீண்டும், இந்த மனு அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க