தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட தேர்வு முடிவுகள்! பெரியார் பல்கலைக்கழகத்தின் அடுத்த சர்ச்சை

தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட தேர்வு முடிவுகள்

``வரும் 18-ம் தேதி பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு சென்னையைச் சேர்ந்த கே லேப் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது'' என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், ``ஒரு பருவத் தேர்வுக்கு 1 கோடி ரூபாய் கே லேப்புக்கு வழங்கப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் ஸ்கேனிங் கருவிகள், இடவசதி, போதிய அலுவலர்கள் இருந்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு நிதி விரயம் ஏற்பட்டுள்ளது. இந்த கே லேப் என்பது பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் முன்னாள் ஆலோசகர் வெங்கடாசலத்தின் உறவினருடையது. இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டவர். அவரை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் தொலைதூரக் கல்வி நிலையத்தின் ஆலோசகராக நியமித்தார். சுவாமிநாதன் பதவிக் காலம் முடிந்ததும் வெங்கடாசலமும் கல்லூரியை விட்டுச் சென்று விட்டார்.  

தேர்வு முடிவுகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதால் ரகசியம் காப்பது கேள்விக்குறியாக உள்ளது. தனியார் சுய நிதி கல்லூரிகள் தனது பண பலத்தால் கே லேப் உடன் மறைமுக உறவு கொண்டு தனது கல்லூரிக்கு நூறு சதவிகித தேர்ச்சியைக் கொண்டு வருவதற்குக் காரணமாக அமைகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் விடைத்தாள்களைப் பெரியார் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு வந்து டம்மி நம்பர் பதிவு செய்து மீண்டும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவதால் பல்கலைக்கழகத்துக்குப் போக்குவரத்துச் செலவு ஏற்படுகிறது. மேலும், தனியார் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குப் பல்கலைக்கழகம் வாடகை கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைவேந்தர் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருவதால், இந்தப் பருவம் முதல் விடைத்தாள் திருத்தும் மையங்களைப் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தியும், தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பை கே லேப்புக்குக் கொடுக்காமல் பெரியார் பல்கலைக்கழகமே நடத்தவும் ஆணையிட வேண்டும். இதனால் தேர்வு தொடர்பான ரகசியங்கள் காப்பதோடு, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் இடையே சமநிலை உறவு ஏற்படக் காரணமாக அமையும். இதனால் அரசு மற்றும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் ஏழை மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்'' என்று கூறினர்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!