வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (07/04/2018)

கடைசி தொடர்பு:14:45 (07/04/2018)

`தேர்தல் பணியிலிருந்து எங்களை விடுவியுங்கள்' - கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கொந்தளிப்பு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலை முறையாக நடத்திடக் கோரி தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் நெல்லைச் சந்திப்பு ரயில் நிலையம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினார்கள்.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலை முறையாக நடத்திடக்கோரி தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினார்கள். 

கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வினரை ஜெயிக்க வைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் எதிர்த் தரப்பினரின் மனுக்களை அவசியம் இல்லாமல் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட குளறுபடிகள் நடக்கின்றன. அதனையும் மீறி எதிரணியினர் ஜெயிக்கும் வாய்ப்பு இருக்குமானால் அந்த இடங்களில் தேர்தலை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. 

இந்த நிலையில், ஆளுங்கட்சியினரின் நெருக்கடிகளைக் கண்டித்து தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நெல்லையில் உள்ள சந்திப்பு ரயில் நிலையம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான முத்துப்பாண்டியன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவர்கள், தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ``தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய கூட்டுறவுச் சங்கத் தேர்தலை முறையாக நடத்திட வேண்டும். இந்தத் தேர்தலை நடத்தும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் முறையாக நடைபெற்றால் எந்தப் பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. தேவையற்ற குளறுபடிகள் செய்வதாலேயே அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. 

அதனால், தேர்தலை முறையாக நடத்தவேண்டும், இல்லையென்றால் எங்களைத் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் பாதிப்புக்கு உள்ளாவது அதிகாரிகளே. அதனால் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்டத் தேர்தல் பணியில் ஈடுபடாமல் புறக்கணிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேயில்லை’’ என்று தெரிவித்தார்.