வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (07/04/2018)

கடைசி தொடர்பு:13:08 (07/04/2018)

ஒரு கிலோ மலைப்பூண்டு 50 ரூபாய்... வேதனையில் விவசாயிகள்

மலைப்பூண்டு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு, பெயர்பெற்றது. மருத்துவகுணமுள்ள இந்தப் பூண்டுக்கு சந்தையில் மிகுந்த வரவேற்பு நிலவும். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை பகுதிகளில் பூண்டு விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. கொடைக்கானல் சாலையோரங்களில் விற்கப்படும் இந்தப் பூண்டுகளை, சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச்செல்வார்கள். கொடைக்கானலிலிருந்து வடுகபட்டி செல்லும் பூண்டு, அங்கிருந்து தமிழகம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

மலைப்பூண்டு விவசாயிகள்

இந்த ஆண்டு, மலைப்பூண்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாகப் பேசிய கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பூண்டு விவசாயி ஒருவர், ‘‘ பூண்டு விவசாயத்துக்கு ஒவ்வொரு முறையும் விதைப் பூண்டை நீலகிரியில் இருந்துதான் வாங்கிட்டுவருவோம். இந்த வருஷம் நல்ல விளைச்சல் கிடைச்சிருக்கு. ஆனா, விலைதான் கிடைக்காதோன்னு கவலையா  இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒரு கிலோ விதைப்பூண்டு 200 ரூபாய்க்கு விலை போச்சு. ஆனா, இப்ப ஒரு கிலோ விதைப்பூண்டு 50 ரூபாய்க்குதான் போகுது. விதைப்பூண்டு விலையே குறைஞ்சுபோனதால, பூண்டுக்கு நல்ல விலை கிடைக்குமான்னு கவலையா இருக்கு. பொதுவா, இங்க ஒரு கிலோ பூண்டு 160 ரூபாயில இருந்து 200 ரூபாய் வரை விற்பனை செய்வோம். அதை வாங்கிட்டுப் போற வியாபாரிங்க, 250 ரூபாயில இருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்வாங்க’’ என்றார். 

கொடைக்கானல் மலைப்பகுதியில் பூண்டுக்கான ஒரு சந்தையை ஏற்படுத்த வேண்டும் என்பது மலைப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்தி, மலைப்பகுதியில் பூண்டுக்கு சந்தை அமைத்தால், இதைப்போன்ற விலை குறைவான காலத்திலும் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலை கிடைக்க வாய்ப்புள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க