வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (07/04/2018)

கடைசி தொடர்பு:10:24 (09/04/2018)

சென்னையில் ஐ.டி பூங்காவால் வெளியேறிய புள்ளிமான்கள் - வீட்டு வாசலில் உணவு, நீருக்காக அலையும் அவலம்

மான்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சென்னை தரமணியில், மான்களைப் பிடிக்க தினமும் வலையோடு அலைந்து திரிந்துவருகின்றனர் வனத்துறையினர். இந்தக் காட்சியை ஆச்சர்யத்துடன் பொதுமக்கள் வேடிக்கைபார்க்கின்றனர்.  

வனப்பகுதியையொட்டி உள்ள ஊர்களில்தான் அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிட்டதாகச் செய்திகள் வெளிவரும். ஆனால், சென்னை தரமணி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் வீட்டு வாசலில் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் காத்திருக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தப் பகுதியில், சர்வசாதாரணமாக மான்கள் அலைந்துதிரிகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளையும் மக்கள் கொடுக்கும் இட்லி, தோசை என அனைத்தையும் மான்கள் விரும்பிச் சாப்பிடுவதாகத் தகவல்கள் நமக்குக் கிடைத்தன. உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்றோம். 

 காலை நேரம். தரமணி பகுதியில் பறக்கும் மின்சார ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம். சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல். இந்த பரபரப்பான சூழலில், மான்களைப் பிடிக்க தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக  மாணவர் விடுதியின் எதிரில் வலையோடு வனத்துறையினர் காத்திருந்தனர். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்தினோம். அவர்களும், 'சார்... இன்னும் கொஞ்ச நேரத்தில் மான்கள் இங்கு வந்திடும். அதை எப்படிப் பிடிக்கிறோம் என்று பாருங்கள்' என்றார் வனத்துறை ரேஞ்சர் ஒருவர். காலை 7 மணியளவில் கூட்டமாக ஐந்து மான்கள் அங்கு வந்தன. அதைப் பார்த்த வனத்துறையினர், மெதுவாக மான்கள் வந்த இடத்தை நோக்கி வலையோடு சென்றனர். ஏற்கெனவே தேர்வுசெய்த  முட்டுச் சந்துப் பகுதியில் வலையை விரித்தனர். பிறகு, மான்களை அந்த முட்டுச் சந்துக்கு மெதுவாகத் துரத்திச்சென்றனர். வனத்துறையினர் கண்ட மான்களும் கூட்டமாகத் துள்ளிக் குதித்து ஓடத்தொடங்கின.

சரியாக வலைவிரிக்கப்பட்ட இடம் வந்ததும், மான்கள் சிதறி ஓடாமல் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். வலையில் சில குட்டி மான்கள்  சிக்கின. பெரிய மான்கள், வலையைத் தாண்டி ஓடின. உடனே, அங்கிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர், கொஞ்சம் உயரமா வலையை கட்டியிருக்கணும் என்று அருகில் இருந்தவரிடம் கூறினார். வலையில் சிக்கிய மான்களின் அருகே சென்ற வனத்துறையினர், மெதுவாக வலையை எடுத்தனர். பிறகு, பின் கால்களைப் பிடித்து தலைகீழாக மானைப் பிடித்துத் தூக்கினர். (முன் கால்களைப் பிடித்து தூக்கினால் பிடிப்பவர்களுக்கு காயம் ஏற்படுமாம். அதற்காகத்தான் இந்த டெக்னிக் என்றார் வனத்துறையைச் சேர்ந்த ஒருவர்) பிறகு தயாராக வைத்திருந்த மரப்பெட்டிகளில் மான்கள் அடைக்கப்பட்டன. இந்தப் பெட்டிகள், மான்களுக்காகவே பிரத்தேயகமாக ஏற்பாடு செய்யப்பட்டவை. வெளிச்சம் உள்ளே வராதபடி அந்தப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. மான்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது, வெளிச்சத்தைப் பார்த்தால் அவைகள் மிரளும். இதற்காகத்தான், இருட்டான பெட்டிக்குள் மான்களை அடைப்பதாக விளக்கம் கொடுத்தனர் வனத்துறையினர். ஒரு பெட்டியில் மூன்று முதல் நான்கு மான்களை அடைக்கலாம் என்று சொல்லிக்கொண்டே பெட்டிக்குள் மான்களை அடைத்தனர் வனத்துறையினர். அடுத்து, அங்கு தயாராக இருந்த வாகனத்தில் அந்த மரப்பெட்டிகள் ஏற்றப்பட்டன. பிடிப்பட்ட மான்களை கிண்டி பூங்காவில் விட்டுவிடுவோம் என்று தெரிவித்தனர்.
 

மான்

மான்களைப் பிடித்த திருப்தியில் வனத்துறையினர் நம்மிடம் விரிவாகப் பேசத் தொடங்கினர். "சென்னை, பெருநகராக மாறுவதற்கு முன், இது ஒரு மீனவ கிராமம். சுற்றிலும் அடர்ந்த காடு இருந்துள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டாலும், அதில் எஞ்சிய  காட்டுப்பகுதி இன்னும் உள்ளன. அதாவது, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, ஐஐடி வளாகம், காந்தி மண்டபம், தரமணியில் உள்ள தேசியப் பூங்கா ஆகியவற்றில் காடுகளை இன்றும் காணலாம். 

கடந்த 1976ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை தேசியப் பூங்காவில், பசுமைக் காடுகளும் புதர்க் காடுகளும் உள்ளன. இங்குதான் புள்ளிமான்கள், கலைமான்கள், நரி, கீரி, பறவைகள், பாம்புகள் எனப் பலவகை உயிரினங்கள் இருந்தன. இந்த வனப்பகுதியில்தான் ஐஐடி கல்வி வளாகம், காந்தி மண்டபம், கிண்டி சிறுவர் பூங்கா என அரசின் பல திட்டங்களுக்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது, 270 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேசியப் பூங்கா செயல்படுகிறது. பறக்கும் மின்சார ரயில் திட்டத்துக்காக தரமணியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அரசுக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கில் உள்ள இடம், தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதி எதிரில் உள்ளது. இந்த இடம், புதர்க்காடுகளாக காணப்பட்டதால், புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தன. தற்போது அந்த இடத்தை 99 ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கு ஐ.டி பூங்கா அமைக்க தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் உள்ள புதர்க் காடுகளை சமீபத்தில் அழிக்கப்பட்டன. இதனால், அங்கு ஆண்டுக்கணக்கில் வாழ்ந்த மான்கள் ஊருக்குள் வரத்தொடங்கின. முன்பெல்லாம், கோடைக்காலங்களில் உணவு, தண்ணீருக்காக மான்கள் சென்னை கோட்டூர்புரம், காந்தி நகர், இந்திரா நகர், தரமணி, நங்கநல்லூர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும். தற்போது புதர்காடுகள் அழிக்கப்பட்டதால், நிரந்தரமாக மான்கள் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டன. போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் மான்கள் சுற்றித்திரிவதால், வாகனங்களில் அடிப்பட்டு உயிர் இழப்பதாக எங்களுக்கு தகவல் வந்தன. இதனால், மான்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  மான்

15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தினமும் காலை 6 மணியிலிருந்து முற்பகல் 10.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல்  மாலை 6.30 மணி வரையும் மான்களைப் பிடித்துள்ளோம். மான்களை விரட்டிப் பிடிக்க முடியாது. மான்களின் ஓட்டத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது. இதனால், காடுகள் அழிக்கப்பட்டவுடன் மான்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுகளை  ஓர் இடத்தில் தொடர்ந்து பல நாள்கள் வைத்தோம். அங்கு, இரைத்தேடி வந்த மான்கள் அவற்றை சாப்பிடத் தொடங்கின. பிறகு, தினமும் உணவு, தண்ணீருக்காக அங்கு வரத்தொடங்கின. அந்தப் பகுதியில் வைத்து மான்களை வலைகள் மூலம் பிடித்துவருகிறோம். கடந்த ஜந்து தினங்களில் எட்டு மான்களைப் பிடித்துள்ளோம். இன்னும் 30-க்கும் மேற்பட்ட மான்கள் இருப்பதாகக் கருதுகிறோம். அவற்றை விரைவில் பிடித்துவிடுவோம். 

பிடிக்கப்படும் மான்களை மரப்பெட்டிகள்மூலம் கிண்டி மற்றும் வண்டலூருக்கு வாகனங்களில் கொண்டுசெல்வோம். பிறகு, மான்களை டாக்டர்கள் பரிசோதிப்பார்கள். ஏனெனில், வனப்பகுதியில் உள்ள மான்களுக்கு நோய் தொற்றுக்கள் இருக்க வாய்ப்புள்ளது. இதனால், ஏற்கெனவே பூங்காவில் உள்ள வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்றனர். 

மான்

இட்லி சாப்பிடும் மான்கள்

 தரமணியில், மான்களை வனத்துறையினர் பிடித்துவருகின்றனர். இதனால், சில மான்கள் அருகில் உள்ள புதருக்குள் தஞ்சம் புகுந்துள்ளன. வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான்களில் சில, வீட்டு விலங்குளாகவே மாறிவிட்டன. அதாவது, மக்கள் கொடுக்கும் இட்லி, தோசை, பிஸ்கட் என  உணவுகளை மான்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன. மேலும், இந்த மான்கள் மக்களோடு வாழவும் பழகிக்கொண்டன. உணவு கிடைக்காத சில மான்கள், பிளாஸ்டிக் கழிவுகளையும் சாப்பிடுவது வேதனைக்குரியது.

வனத்துறையினரிடம் பிடிபடும் மான்களில் சில, தங்களுடைய கூட்டத்தைப் பிரிந்து பூங்காவில் தனிமையில் வாடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சென்னையைச் சுற்றியுள்ள வனப்பகுதியில், ஏராளமான மான்கள் வசித்ததாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால், கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 220 மான்கள் இறந்துள்ளதாக மற்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. மான்களின் இறப்பு தொடர்கதையாகிவருவதாகச் சொல்லப்படுகிறது.  அதாவது, வாகனங்களில் அடிப்பட்டும், வேட்டைக் கும்பலிடம் சிக்கியும் மான்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டன என்று ஆதங்கப்படுகின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

சென்னையில், வனத்துறையினர் மான்களைப் பிடிப்பதை மக்கள் வேடிக்கைபார்க்கத் தவறுவதில்லை. அதேநேரம், தரமணியில் சுற்றித்திரியும் மான்களுக்கு வன உயிரின ஆர்வலர்களும், தமிழக வனத்துறையினரும் வாழ்வளிப்பார்களா...


டிரெண்டிங் @ விகடன்