வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (07/04/2018)

கடைசி தொடர்பு:14:29 (07/04/2018)

`எங்களுடன் ஆலோசிக்கவில்லை'- ஆளுநரைச் சாடிய அமைச்சர் சி.வி.சண்முகம் #AnnaUniversity

`எங்களுடன் ஆலோசிக்கவில்லை'- ஆளுநரைச் சாடிய அமைச்சர் சி.வி.சண்முகம் #AnnaUniversity

அமைச்சர் சி.வி.சண்முகம்

"அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்குத் தொடர்பு இல்லை. ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

விழுப்புரத்தில் கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம், "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.க அரசு தட்டிக்கழிக்கவே தமிழக பா.ஜ.க வினர் அரசியல் செய்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்குத் தொடர்பு இல்லை. அது சம்பந்தமாக எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரிவிக்க மாட்டார்கள். அதற்கான குழுவை அமைப்பது மட்டுமே தமிழக அரசின் பணி. அதை நாங்கள் செய்துவிட்டோம். ஆளுநர் தன்னிச்சையாக துணைவேந்தரை நியமித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் அப்துல் கலாம் போன்ற வல்லுநர்கள்  எத்தனையோ பேர் உள்ளனர். அப்படி இருக்க ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து  கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது வருத்தமளிக்கிறது" என்றார். 

முன்னதாக தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் காவிரி வழக்கை ஒழுங்காக நடத்தாததால்தான் அந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது எனத் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்குப் பதிலளித்த அவர்,  ``என்ன வழக்கை நாங்கள் சரியாக நடத்தவில்லை. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடுத்து 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பைப் பெற்றோம். அதை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. அதைச் செய்யாத அவர்கள் இப்படியான சாக்கு போக்குகளைக் கூறி வருகின்றனர்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க