' மீம்ஸ் போடுவது நமது வேலையல்ல..!'   - ஐ.டி விங்க் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய அறிவாலயம்

பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், சமூகவலைத்தளங்களிலேயே 90 சதவீத நேரத்தைக் கழித்துக் கொண்டு, பொய்யான விஷயங்களைப் பரப்புகிறார்கள். நமது வேலை அதுவல்ல' என ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் ஐ.டி விங்க் நிர்வாகிகள். 

' மீம்ஸ் போடுவது நமது வேலையல்ல..!'   - ஐ.டி விங்க் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய அறிவாலயம்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியின் தொடக்கவிழாவை இன்று அறிவாலயத்தில் நடத்தியுள்ளனர். ' பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், சமூகவலைதளங்களிலேயே 90 சதவிகித நேரத்தைக் கழித்துக்கொண்டு, பொய்யான விஷயங்களைப் பரப்புகிறார்கள். நமது வேலை அதுவல்ல' என ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர், ஐ.டி விங்க் நிர்வாகிகள். 

' மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கவேண்டியது அவசியம். இதன்மூலம், நமது கொள்கைகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முடியும்'  என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு, நிர்வாகிகள் சிலர் கொண்டு சென்றனர். இதையடுத்து, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ஐ.டி விங்கின் மாநிலச் செயலாளராக நியமித்தார் ஸ்டாலின்.  அதன்பின்னர், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்வுசெய்யும் நேர்காணல்களை நடத்தினார், தியாகராஜன். இதில் தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது அண்ணா அறிவாலயம். இன்று, ஐ.டி விங்கின் தொடக்க விழாவை தனியார் ஓட்டல் ஒன்றில் நடத்தியுள்ளனர். 64 மாவட்டங்களில் இருந்து 439 நிர்வாகிகள் இன்று பங்கேற்றுள்ளனர். 

கூட்டத்தில் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., ' பா.ஜ.க உள்பட மற்ற கட்சிகளில் இருக்கக்கூடியவர்களைப் போல அல்ல நம்முடைய ஐ.டி விங்க். அவர்கள் அனைவரும் 99 சதவிகிதம் சமூக வலைதளங்களில்தான் இயங்குகிறார்கள். அதன்மூலம் சில தவறான கருத்துகளையும் பரப்புகிறார்கள். சோஷியல் மீடியாவில் ட்ரால் போடுவது, மீம்ஸ் போடுவது என சில கட்சிகள் செயல்படுகின்றன. மீம்ஸ் போடுவது மட்டும் பணியல்ல. அதையும் தாண்டி ஏராளமான களப்பணிகள் இருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை, சோஷியல் மீடியா பணி என்பது வெறும் 5 சதவிகிதம்தான். மீதமுள்ள 95 சதவிகிதமும் நீங்கள் களத்தில்தான் இருக்க வேண்டும்' என்றவர், ' யாருடைய சிபாரிசின் பேரிலும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வுசெய்யப்படவில்லை. உங்களுடைய தனிப்பட்ட திறமையின் அடிப்படையில்தான் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறீர்கள். 

மாவட்டங்களுக்குப் போகும்போதுகூட, அங்குள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு நாங்கள் செலவு வைக்கவில்லை. ' நம்மால் மற்றவர்களுக்கு எந்தச் செலவும் வந்துவிடக் கூடாது' என்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருந்தோம். அவர்களது உபசரிப்பை ஏற்றுக் கொண்டால், சிபாரிசையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். அடுத்தகட்டமாக, பூத் அளவில் நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறோம். அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு நிர்வாகிகளின்கீழும் 800 பேர் வரை வருவார்கள்.அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாகச் செய்தால் போதும். எத்தனை காலத்துக்கு நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்களோ, அவ்வளவு ஆண்டுக்காலம் நீங்களும் இந்தப் பதவியில் நீடிப்பீர்கள். மாவட்டச் செயலாளர் கூறினாலும்கூட இந்தப் பதவியிலிருந்து யாரும் நீக்கப்பட மாட்டீர்கள். எப்படித் தேர்வு செய்யப்பட்டீர்களோ, அதேவகையில்தான் நீக்கப்படுவீர்கள்' என்றதோடு முடித்துக்கொண்டார். 

அடுத்துப் பேசிய மாநில ஐ.டி விங்க் துணைச் செயலாளர் கார்த்திக் மோகன், ' பெரம்பலூரில் நேர்காணல் நடத்தியபோது, ஆர்வத்துடன் ஒருவர் பங்கேற்றார். அவர் எங்களிடம் பேசும்போது, ' கப்பல் கம்பெனியில் சாதாரண வேலையில் சேர்ந்து, கேட்டரிங் மேனேஜர் அளவுக்கு உயர்ந்தேன்' எனக் கூறினார். அவரிடம், ' கட்சித் தொடர்பு இருக்கிறதா? மாவட்டச் செயலாளரைத் தெரியுமா?' எனக் கேட்டபோது, 'எனக்குத் தெரியும்' என்றார். அருகில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர் எங்களிடம், ' இவர் மாவட்டச் செயலாளரின் மகன். அதைச் சொல்லாமலேயே நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார்' எனக் கூறினார். 'நாங்கள் சிபாரிசை ஏற்பதில்லை' என்பதை அறிந்துதான், திறமையை மட்டும் வெளிக்காட்ட நினைத்தார் அந்த இளைஞர். சோஷியல் மீடியாவில் தற்பெருமை பேசிக் கொள்கிறார்களா? சாதிரீதியாகச் செயல்படுகிறார்களா எனப் பார்த்துப் பார்த்து மதிப்பெண் போட்டுத் தேர்வுசெய்தோம்' என்றோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!