`தற்போது சென்னையில் போட்டி வேண்டாம்!’ - ஐ.பி.எல் சேர்மனுக்கு திருமாவளவன் கடிதம் #WeWantCMB

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஐபிஎல் தொடரின் நிர்வாகக் குழு தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திருமாவளவன்

தமிழகத்தில் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.
இதில் மிகப்பெரிய விசயமாகப் பார்க்கப்படுவது காவிரி விவகாரம். கடந்த ஒரு வாரக்காலமாகவே காவிரி விவகாரம் தொடர்பாக
தமிழகத்தில் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உண்ணாவிரதம், முழு அடைப்பு, ரயில்மறியல் போன்றவை ஆளும் கட்சியினராலும், எதிர்க்கட்சிகளாலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. தமிழகத்தில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் இந்தச் சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலர் தெரிவித்து வந்தனர். இவர்களின் வரிசையில் விடுதலைச் சிறுதைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஐபிஎல் தொடரின் நிர்வாகத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், ``தமிழகத்தில் இருக்கும் நிலை குறித்து தாங்கள் நன்கு அறிவீர்கள் என நினைக்கிறேன் இந்தச் சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும் அதை அமைக்க வலியுறுத்தியும் தமிழக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழக மக்களின் நிலையறிந்து ஐபிஎல் போட்டிகளைச் சென்னையில் நடத்த வேண்டாம். நாங்கள் கிரிகெட் விளையாட்டுக்கும் ஐபிஎல் தொடருக்கும் எதிரானவர்கள் அல்ல, தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணித்தால் நல்லது. மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!