Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``மத்திய அரசுக்கு கைகட்டி சேவகம் செய்வதுதான் `அம்மா' வழி ஆட்சியா?'' - கொதிக்கும் போராளிகள்

Chennai: 

“வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணிவிடலாம்; வரிசையாய்ச் செல்லும் எறும்புகளை எண்ணிவிடலாம். ஆனால், நாளுக்குநாள் வலுக்கும் பிரச்னைகளை எண்ண முடியாது” என்கின்றனர் போராளிகள். “எதையும் உடனே விளங்கிக்கொள்ளாத மனிதனைச் சரியான  ‘டியூப்லைட்’ என்று சொல்வதைப் போன்றே இருக்கிறது இன்றைய ஆட்சியாளர்களின் நிலை” என்று சொல்லும் அவர்கள், “தமிழகத்தில் தலைவிரித்தாடும் பிரச்னைகளுக்கு எல்லாம் டெல்லியில் தலைசாய்த்துப் போகும் ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது” என்று குமுறுகின்றனர்.

தமிழகத்தில் நடந்த களேபரங்கள்! 

பேசாத பெருந்தலைகள் எல்லாம் பேச ஆரம்பித்ததும், விழுதாக இருந்த கட்சியை வில்லாக வளைத்து ஒடித்ததும், மெரினாவில் மெளனம், சத்தியம் போன்ற காட்சிகள் நிறைவேற்றப்பட்டதும், பதவிக்காகக் கூவத்தூர் பங்களாவின் குளுகுளு அறைகளில் மக்களின் பிரதிநிதிகள் ஒளித்துவைக்கப்பட்டதும் என தமிழகத்தில் நடந்த களேபரங்கள் கொஞ்சநஞ்சமல்ல... அவை, எதுவும் எளிதில் மறக்கக்கூடியதும் அல்ல.

பிரச்னைகளைச் சந்திக்கும் தமிழகம்!

“ ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். ஆம், ஆளும் கட்சியில் உள்ள ஒருவருடைய பேச்சும், செயலுமே அதற்கு உதாரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய சாதனை. இல்லையில்லை, ஒவ்வொருவருடைய சாதனையாக இருக்கின்றது என்பதுதான் நிஜம்! சோற்றுப் பானை உடைந்தால்கூடப் பரவாயில்லை; அதையும் நாங்கள் பங்கு பிரித்துக்கொள்கிறோம் என்ற நிலையில்தான் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்; அதுவும் மத்திய அரசின் துணையோடு. அந்த அரசைப் பலவிதங்களில் புறந்தள்ளிய ஜெயலலிதாவின் கால்களில் விழுந்தவர்கள்தான், இன்று தன்னுடைய பதவிக்காக அந்த அரசின் காலடியில் வீழ்ந்துகிடக்கிறார்கள். அதன் விளைவுதான், இன்று தமிழகம் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது” என்று அவர்கள் மேலும் குமுறுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு

காவிரி... நியூட்ரினோ... நீட்!

“அப்படி, மத்திய அரசுக்கு ஆதரவுகொடுத்து தமிழகம் சந்திக்கும் பிரச்னைகள் என்ன”வென்று அந்தப் போராளிகளிடம் கேட்டோம். 
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் கெடு விதித்தது. ஆனால் மத்திய அரசோ, கர்நாடகத் தேர்தலை மனதில்வைத்து அதற்கு மெளனம் சாதித்துவருகிறது. இதனால் கொந்தளிக்கிறது தமிழகம். இதற்கு எல்லாக் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்திவரும் வேளையில், அ.தி.மு.க-வோ, மத்திய அரசுக்கு எந்தவித சிக்கலுமின்றி மிகச் சாதாரணமாக ஓர் உண்ணாவிரதத்தை நடத்திவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது” என்றவர்கள், மேலும் தொடர்ந்தனர். 

“நியூட்ரினோவுக்கு, மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, தமிழகத்தில் ‘எதையும் இழப்போம்; எங்கள் மண்ணை இழக்க மாட்டோம்’ஓ.பன்னீர்செல்வம் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவருகின்றன. எப்போதும்போல இந்தப் பிரச்னைக்கும் மெளனம் சாதித்து வருகிறது, தமிழக அரசு. அதுபோல, மத்திய அரசு கொண்டுவந்த ‘நீட்’ தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு இறந்தது தமிழகம் முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போதும்கூட அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லாமல், தமிழக அரசு அதனுடைய வேலைகளிலேயே மூழ்கிப்போனது. ‘ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்விப் பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கப்பட்ட ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத தமிழக அரசு, காவல் துறையின் உதவியுடன் ரதத்துக்கு ராஜபோக மரியாதை அளித்தது.

முட்டுக்கட்டைப் போட்ட ஜெ.!

மத்திய அரசு, காவிரி டெல்டா பகுதிகளில் சில நிறுவனங்களுக்கு மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதியளிக்க... அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய உணர்வுகளைக் கடைசிவரை கண்டுகொள்ளாத தமிழக அரசு, இறுதியில் காவல் துறையின் கைத்தடிகள்மூலம் காயப்படுத்தியது. ஒருகாலத்தில், வறுமையின் பிடியில் சிக்கிய மனிதன்கூட ஊரில் ஒதுக்கப்பட்டிருந்த ரேஷன் கடைகள்மூலம் உயிர் வாழ்ந்தான். ஆனால் இன்று, மத்திய அரசு அந்தக் கடைகளுக்கு வழங்கும் பொருள்களின் அளவைக் குறைத்துக்கொண்டே போய், முற்றிலும் ஒருநபர் கார்டுகளுக்கு உணவுப்பொருளே இல்லாமல் ஆக்கிவிட்டது. இதற்கு, தமிழக அரசு கொஞ்சம்கூட எதிர்ப்புக் காட்டாமல், அது செய்யும் அனைத்தும் நன்மைக்கே என்ற வகையில் தண்டோரா போட்டுக்கொண்டுவருகிறது. 

பன்வாரிலால் புரோஹித்

மத்திய அரசின் உதய் திட்டத்தில், மாநிலங்களுக்கான சாதக அம்சங்களைவிட பாதக அம்சங்களே அதிகம் இருப்பதாக ஜெயலலிதா கருதியதுடன், அந்தத் திட்டத்தில் இணையவும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்தார். ஆனால், அவரிடம் இருந்த இன்றைய ஆட்சியாளர்களோ... அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால், தமிழகமும் அதில் இணைந்திருக்கிறது. இதற்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தபோது தமிழக அரசின் பதில், மெளனம் மட்டுமாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாக இருக்கும் இந்த நாட்டில், அவர்கள் செய்யவேண்டிய வேலையை... ஆளுநர் ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று ஆய்வு என்ற பெயரில் செய்துவருகிறார். இதற்குப் பயங்கர எதிர்ப்பு இருந்தாலும், ஆளும் கட்சி சார்பில் இதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டேவருகிறது.

வேதனையாக இருக்கிறது!” 

விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்டவைகுறித்து டெல்லியில் மத்திய அரசிடம் கோரிக்கைவைத்து, விவசாயிகள் நிர்வாணமாகவும், வேறு பல வகைகளிலும் 100 நாள்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், மத்திய அரசு இவர்களின் கோரிக்கைகளையும் கண்டுகொள்ளவில்லை; அவர்களுடைய நிலையையும் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களுடைய எதிர்ப்புக் குரல், மத்திய அரசுக்கு எதிராக விண்ணைப் பிளந்தபோது, தமிழக அரசுகூட அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்தது. இப்படி ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களுக்கு, இன்று அவர்மூலம் உயர்ந்தவர்களே... அவர் அவையில் இருப்பவர்களே... அதை வரவேற்பதுதான் வேதனையாக இருக்கிறது” என்று சொல்லும் அவர்கள், “இதுதவிர தமிழகம் சந்திக்கும் பிரச்னைகள் இன்னும் அதிகம்” என்கின்றனர்.

தமிழகத்தில், பிரச்னைகள்தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement