`சாவியைக் கொடுங்கள்; ஆபீஸை திறக்கணும்' - போராட்டக்காரர்களிடம் கெஞ்சிய போலீஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தஞ்சாவூரில் எல்ஐசி அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி போராட்டம் நடத்தினர். காவல் துறையினர் கேட்டும் அவர்கள் சாயியை தராமல் எடுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எல்ஐசி கிளை அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி போராட்டம் நடத்தினர். அவர்களைக் கைதுசெய்த காவல்துறையினர், அலுவலகத்தை திறப்பதற்கு சாவியை கொடுங்கள் என கெஞ்சினர். அதற்கு அவர்கள், `போராட்டமே பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் தான். அதனால் சாவியை தர முடியாது' எனக் கூறினர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு  நிலவியது.

போராட்டக்காரர்களிடம் கெஞ்சிய போலீஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ரயில், பஸ் மறியல் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை அடக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்ஐசி கிளை அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம்  நடத்தினர். சரியாக 10.30 மணியளவில் அங்கு கூடிய போராட்டக் குழுவினர் எல்ஐசி அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர்களை வெளியே அனுப்பினர். பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த பூட்டை எடுத்து கதவை இழுத்து பூட்டியதோடு வாசலில் அமர்ந்து இது வாழ்வா சாவா போரட்டம் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும்  கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

அப்போது இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விசிறி சாமியார் போராட்டக் குழுவினர் மீது பூக்களை தூவி போராட்டக்காரர்களை வாழ்த்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது அவர்களிடம், 'போராட்டம் முடிந்துவிட்டது. அலுவலகத்தை திறப்பதற்கு சாவியை கொடுங்கள்' என போலீஸார்  கெஞ்சிக் கேட்டனர். 'போராட்டமே பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் தான். அதனால் சாவியை தர முடியாது' என அவர்கள் மறுத்துவிட்டு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்த மினி பேருந்தில் ஏறிச் சென்றனர்.

என்ன செய்வதென புரியாமல் திகைத்த காவல்துறையினர் பூட்டை உடைப்பதற்கு ஆக்‌ஷா பிளேடு எடுத்துகிட்டு வரச் சொன்னார்கள். இல்லையென்றால் பூட்டு திறக்கும் ஆளை அழைத்து வாருங்கள் என ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் அங்கு வர ஆரம்பித்தனர். பின்னர் முன் பகுதியை போர்டு கொண்டு அடைத்த காவல்துறையினர் பின்வாசல் வழியாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உள்ளே செல்ல வைத்தனர். பூட்டு உடைக்கும்போது அதைப் படம் பிடிப்பதற்காக காத்திருந்த ஊடகத்தினரை 'ஒண்ணும் இல்லை; நாங்க சாவி வந்ததும் திறந்து விடுவோம். நீங்க கிளம்புங்க' என அனைவரையும் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!