போராட்டம் எதிரொலி! நெல்லையில் ஐ.பி.எல் கிரிக்கெட் நிகழ்ச்சி திடீர் ரத்து | ipl fun park program in nellai has been cancelled due to protest

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/04/2018)

கடைசி தொடர்பு:16:00 (07/04/2018)

போராட்டம் எதிரொலி! நெல்லையில் ஐ.பி.எல் கிரிக்கெட் நிகழ்ச்சி திடீர் ரத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக நெல்லையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் 1 பன் பார்க் என்ற நிகழ்ச்சிகாகக் கொடுக்கப்பட்ட அனுமதியைக் காவல்துறை ரத்து செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக நெல்லையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். ஃபேன் பார்க் என்ற கிரிக்கெட் நிகழ்ச்சிக்காகக் கொடுக்கப்பட்ட அனுமதியைக் காவல்துறை ரத்து செய்துள்ளது. 

கிரிக்கெட் நிகழ்ச்சி ரத்து

கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இரண்டு வருட தடைக்குப் பின்னர், சி.எஸ்.கே அணி இந்த ஆண்டுக்கான போட்டியில் களம் இறங்குகிறது. இப்போட்டியின் முதல் ஆட்டம், மும்பையில் இன்று தொடங்குகிறது. அதில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சி.எஸ்.கே அணிகள் மோதுகின்றன. மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவும் அதன் பின்னர், இரவு 8 மணிக்குப் போட்டியும் தொடங்குகின்றன.

இந்தப் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிக்க முடியாதவர்கள் போட்டிகளை திரையில் கண்டுகளிக்கும் வகையில், ஐ.பி.எல் ஃபேன் பார்க் என்ற நிகழ்ச்சிக்கு ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் 36 நகரங்களில் பெரிய திரையில் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அந்த இடத்தில் போட்டிக்கான டீ ஷர்டுகள், தொப்பிகள் மட்டும் அல்லாமல் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒளிபரப்பு நடக்கும் இடத்தில், குழந்தை மண்டலம், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகள், வீரர்களின் முக ஓவியம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெல்லையில், மாநகராட்சி மைதானத்தில் இந்த ஃபேன் பார்க் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இலவச டிக்கெட்டுகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் 10,000 பேர் கூடுவார்கள் என ஐ.பி.எல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இன்றும் நாளையும் நடக்கும் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு, குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிக்கை ஆகிய காரணங்களால் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ள நிலையில், இந்த அரங்கத்தில் திரளும் கூட்டத்தினர் போராட்டத்தில் குதிக்கக் கூடும் என உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியது. அதனால் காவல்துறை இந்தப் போட்டிக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. அதன் காரணமாக அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து திரையிடலுக்குத் தயாராக இருந்த ஐ.பி.எல் நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.