`ஒரே வெட்டு....ஓகோன்னு வாழ்க்கை'- சென்னை போலீஸை பதறவைத்த `சாம்பார்' பிரகாஷின் வாக்குமூலம்

திருடர்கள்

 சென்னையில் காவலாளியின் கையை வெட்டிவிட்டு செல்போனைத் திருடிவிட்டு தப்பியோடிய திருடர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு திருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரவைத்துள்ளது.

சென்னை திருமங்கலம், சத்யசாய் நகரில் கட்டடப்பணி நடந்துவருகிறது. இங்கு வேலை செய்பவர்கள் `திருடன் திருடன்' என்று கத்திக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் வந்தனர். அப்போது அங்கு இரண்டு பேர் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சிலர் விரட்டினர். சினிமா பாணியில் திருடர்களை மக்கள் விரட்டியபோது, திருடனில் ஒருவன் மறைத்துவைத்திருந்த அரிவாளால் காவலாளியை  வெட்டிவிட்டு தப்பி ஓடினான். இந்தத்தகவல் கிடைத்தும் போலீஸார் திருடனைத் தேடினர். கோயம்பேடு பாலத்தின் கீழ் பதுங்கியிருந்த திருடர்களை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் டேவிட், சாம்பார் பிரகாஷ் எனத் தெரியவந்தது. 

இந்த திகில் சம்பவம்குறித்து போலீஸார் கூறுகையில், "சென்னை திருமங்கலம், சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் ஈசாக். இவரது மனைவி தில்ஷாத். இவர்கள் இருவரும் அந்தப்பகுதியில் கட்டடப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுடன் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அதிகாலை 3.30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த செல்போன்களைத் திருடிவிட்டு தப்பினர். அதைப்பார்த்த தில்ஷாத், `திருடன்' என்று கத்தினார். அவரைத் திருடர்கள் தள்ளிவிட்டு தப்பினர்.

தில்ஷாத்தின் சத்தம்கேட்டு தூங்கிக்கொண்டிருந்த ஈசாக் மற்றும் வடமாநில இளைஞர்கள் கண்விழித்தனர். அவர்கள் திருடர்களை விரட்டினர். அப்போது, முதுகுப்பகுதியில் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து திருடன் மிரட்டினான். இந்தச்சமயத்தில் அங்கு காவலாளியாக பணியாற்றும் சந்திரசேகர், திருடனைப் பிடிக்க முயற்சி செய்தார். அவரது கையை அரிவாளால் வெட்டுவிட்டு திருடர்கள் தப்பினர். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். போலீஸாரும் திருடர்களைத் தேடினர். கோயம்பேடு பாலத்தின் கீழ் பதுங்கியிருந்த டேவிட், சாம்பார் பிரகாஷ் என இரண்டு திருடர்களை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

சாம்பார் பிரகாஷ், பாடிபுதுநகரைச் சேர்ந்தவர். இவர் மீது சென்னை ஜெ.ஜெ.நகர், சேலம் ஆகிய காவல்நிலையங்களில் கொள்ளை வழக்கு உள்ளது. பிரகாஷின் தந்தை சமையல் மாஸ்டர். அவருடன் வேலைக்குச் செல்லும் பிரகாஷ், சாம்பாரை சுவையாக தயாரிப்பாராம். இதனால், சாம்பார் பிரகாஷ் என்று அவரது நண்பர்கள் அடைமொழி வைத்து அழைத்துள்ளனர். தொடர்ந்து பிரகாஷிடம்  விசாரித்தபோது, `செல்போனைத் திருடும்போது அரிவாளைக் காட்டி மிரட்டுவேன். அப்போது செல்போனைத் தரவில்லை என்றால் வெட்டிவிட்டு தப்பிவிடுவேன். செல்போன்களை விற்று ஆடம்பரமாக செலவழிப்பேன். இதற்காக முதுகுப்பகுதியில் எப்போதும் அரிவாள் வைத்திருப்பேன்' என்று தெரிவித்தான். அவனிடமிருந்து 3 செல்போன், அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

இந்த வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!