'இந்த ஆட்சி நித்திய கண்டம் பூரண ஆயுசாக இருக்கிறது'- ஆர்ப்பாட்டத்தில் தினகரன் கிண்டல் | "Not even grateful to the people who vote for it" DTV Dinakaran speech in Dharmapuri

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (07/04/2018)

'இந்த ஆட்சி நித்திய கண்டம் பூரண ஆயுசாக இருக்கிறது'- ஆர்ப்பாட்டத்தில் தினகரன் கிண்டல்

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே அமல்படுத்தாமல் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய- மாநில அரசுகளின் போக்கிற்கு முடிவுகட்டவும், உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காவிரி கரையோர அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்து தனது முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் தர்மபுரியில் தொடங்கினார். 

 தினகரன்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வு. ஆனால், மத்திய அரசை எதிர்த்து உண்ணாவிரம் இருந்த முதலமைச்சரோ, துணை முதல்மைச்சரோ, அமைச்சர்களோ சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பேசவில்லை. காரணம் அவர்களுக்கு ஆட்சியில் இருந்தால்போதும். தமிழகம் பாலைவனமாக ஆனாலும் அவர்களுக்குக் கவலை இல்லை. காரணம் அவர்கள் பெரிய இடத்தில் இருக்கிறார்கள். வருங்காலத்தில் இவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் ஸ்விட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கின்றனர். இதுமட்டுமா...? டெல்டா மாவட்டங்களில் மக்கள் விரோதமான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டுவர துணைபோகின்றனர். அப்படி அனுமதித்தால் வரும் காலங்களில் தமிழகம் சோமாலியாவாக மாறிவிடுகின்ற ஒரு நிலை உள்ளது. இங்கே ஆட்சி செய்பவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. காரணம் இந்த ஆட்சி யாரால் அமைந்ததோ அவர்களுக்கும் நன்றியுடன் இல்லை. சரி, ஓட்டுப் போட்ட மக்களுக்காவது நன்றியுடன் இருக்கிறார்களா? என்று எண்ணிப் பார்த்தால் மக்களுக்கும் நன்றியுடன் இல்லை. இவர்களுக்குப் பதவி மட்டுமே முக்கியமாக இருக்கிறது. 

தினகரன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

காவிரியில் தண்ணீர் இல்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகளும், காவிரியில் குடிநீர் பெறும் பல்வேறு மாவட்ட மக்கள் என 8 கோடி தமிழர்களும் பதறித் தவிக்கின்றனர். ஆனால், இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தீர்ப்பின் வார்த்தை விளையாட்டில் திட்டமிட்டு விளையாடிக் கொண்டுள்ளது. அவர்களின் சதி திட்டம் தமிழகத்தில் முறியடிக்கப்படும். வருங்காலத்தில் தமிழகத்தில் தேர்தல் வந்தால் மத்தியிலேயே ஆளுகின்றவர்களும் சரி, தமிழகத்தில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள நித்திய கண்டம் பூரண ஆயுசாக இருப்பவர்களையும் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.

மக்களுக்காகப் போராடும் இதுபோன்ற கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி தேவையில்லை. ஆனால், எங்கள் மாவட்டச் செயலாளர் முறையாக அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெற்ற பிறகு ஒருநாள் முன்பாக அனுமதி இல்லை என்று போலீஸ் எங்கள் கழகக் கொடிகளை எல்லாம் கழற்றியுள்ளது. மதிகெட்டவர்கள் பேச்சைக் கேட்டு போலீஸ் இப்படிச் செய்யலாமா... மக்களின் உணர்வுகள் என்ன என்பதைத் தெரிந்தும் போலீஸ் இப்படிச் செய்தது வருத்தம் அளிக்கின்றது. ஆனால், தடைகளையெல்லாம் தாண்டி இவ்வளவு கூட்டம் கூடியுள்ளது என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது என்றார். 


[X] Close

[X] Close