வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (07/04/2018)

கடைசி தொடர்பு:16:03 (07/04/2018)

`ஓட்டுக் கேட்க வந்ததோட சரி'- கிருஷ்ணசாமியிடம் சீறிய ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள்

"மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வேறு வடிவம் எடுக்கிறது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்" என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

Krishnasamy meet to people

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்டாரம்பட்டி கிராம மக்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, மக்களிடம் ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரை போராட்ட மக்களுடன் அமர்ந்து பேசுமாறு மக்கள் கூறினர். ஆனால், கிருஷ்ணசாமி அமர மறுத்துவிட்டார். அவருக்கு ஒருவர் சேர் எடுத்து வர,  போராட்டக்களத்துக்கு வந்த எல்லாத் தலைவருக்கும் அமர சேர் போட்டோமா? சேர் போடக்கூடாது என சில மக்கள் சொல்ல, அதைக் கவனித்துக்கொண்ட கிருஷ்ணசாமி, நின்று கொண்டேதான் பேசினார்.

''இதுக்கு முன்னாள் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது ஓட்டுக் கேட்க வந்ததோட சரி... அதுக்கப்புறம் இப்போதான் வந்திருக்கார். பதவியில இருக்கும்போது இந்த ஸ்டெர்லைட் ஆலையால மக்களுக்கு பாதிப்பு  இருக்குதுன்னு டாக்டர் ஐயாவுக்கு தெரியலையா?" என  சிலர் கூச்சலிட சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Krishnasamy meet to people

"இந்த ஆலை வெளியிடும் புகையால், உடல் ரீதியாக என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது?" எனக் கேட்டார் டாக்டர். "மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பாதிப்பு உள்ளது" என சில பெண்கள் சொல்ல, "புற்றுநோய் இருக்கிறது என்றால் மருத்துவ ரிப்போர்ட் இருக்கிறதா? அந்த ஆதாரத்தை வைத்துதான் நான் மீடியாக்களிடமும், அரசிடமும் பேச முடியும். ரிப்போர்ட்டை மொத்தமாகக் கொடுங்கள்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கடந்த முறை இந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, இந்தப் பகுதியில் தினமும்   நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு லாரிகள் மூலம் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எடுத்துச் சென்றபோதே, சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். வெளிநடப்பும் செய்துள்ளேன். இந்த ஆலையின் புகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போதுதான் விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தடுத்த கிராமங்களில் தொடர்ந்து வரும் மக்களின் போராட்டம், வேறு வடிவம் எடுக்கிறது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

பண்டாரம்பட்டி, தெற்குவீரபாண்டியாபுரம், குமரெட்டியாபுரம் ஆகிய 3 கிராமங்களிலும் மக்களுடன் கிருஷ்ணசாமி அமர்ந்து பேசவில்லை. மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமும் எழுப்பவில்லை. எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ஒருமுறைகூட வராதது குறித்து கிருஷ்ணசாமி மீது 3 கிராமத்திலும் மக்கள் அதிருப்தியையே வெளிப்படுத்தினர். மக்களின் அதிருப்தியை கிருஷ்ணசாமியும் புரிந்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க