`தமிழகத்தை எங்களைப் போலவே மாற்றிவிடாதீர்கள்' - கண்கலங்க வைத்த மாற்றுத் திறனாளிகள்

காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் தமிழகம் எங்களைப் போலவே மாறிவிடும் என காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெர்ர ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மனம் கலங்க வைத்தனர்.

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால்  கர்நாடக அரசு கண்டிப்பாக காவிரிக்கு தண்ணீர் தராது. அப்படி காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாடும் எங்களைப் போலவே ஊனமாகிவிடும். அதனால் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்'' என மத்திய அரசை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கண் கலங்கப் பேசி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாற்றுத் திறனாளிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோடை வெயிலையும் தாண்டி கொதித்து வருகிறது தமிழகம். ஆனாலும், இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் மெத்தனம் காட்டும் மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்துப் போராட்டங்கள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாற்றுத் திறனாளிகள், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மாற்றுத்திறனாளிகள் தபால் நிலையத்தை முற்றுகையிடக்கூடாது என்பதற்காக பெரும் படையோடு போலீஸ் அந்த இடத்தில் காத்திருந்தனர். சரியாக 11 மணிக்கு காலிக் குடங்களுடன் கையில் கறுப்புக் கொடிகளை பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாற்றுத்திறனாளிகள்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாதிக்கப்படும் என்பதும் முற்றிலும் உண்மை. அதோடு காவிரி பாய்ந்தால்தான் தமிழகம் குறைபாடு  இல்லாத மாநிலமாக இருக்கும். இல்லையென்றால் எங்களைப் போலவே ஊனமடைந்த மாநிலமாக மாறிவிடும். உடலில் ஏற்பட்ட குறைகளால் நாங்கள் படும் இன்னல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அதேபோல் தமிழகத்தின் ரத்த நாளமான காவிரியில் தண்ணீர் பாய்ந்தால்தான் தமிழக தாய் எந்தவித குறைபாடுமின்றி நன்றாக இருப்பாள். எனவே, மத்திய அரசே எங்களைப்போலவே தமிழகத்தையும் மாற்றுத் திறனாளிகளாக மாற்றி விடாதீர்கள்'' என கண் கலங்கப் பேசி கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களும் மனம் வருந்தினர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!