வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (07/04/2018)

கடைசி தொடர்பு:16:39 (07/04/2018)

``என்னிடம் போலீஸார் அத்துமீறினர்' - மாநில மனித உரிமை ஆணையத்திடம் பிரகாஷின் தாய் அதிர்ச்சி புகார்

பிரகாஷின் அம்மாசங்கீதா

என்னிடம் போலீஸார் அத்துமீறி நடந்துள்ளனர் என்று பிரகாஷின் அம்மா சங்கீதா மாநில மனித உரிமை ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் போக்குவரத்து போலீஸார் 500 ரூபாய் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
 சென்னை தி.நகரில் கடந்த 2-ம் தேதி போலீஸாருடன் சாலிகிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் மல்லுக்கட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து இந்த வழக்கை சுமோட்டோவாக எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது. இந்தநிலையில், பிரகாஷின் அம்மா சங்கீதாவும் தன் தரப்பு விளக்கத்தை மாநில மனித உரிமை ஆணையத்திடம் மனுவாகத் தாக்கல் செய்துள்ளார். 

 அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 

 "கடந்த 2.4.2018 மாலை 6.30 மணியளவில் என்னுடைய மகனின் டூவீலரில் நான் தி.நகருக்குச் சென்றேன். பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அப்போது மூன்று போக்குவரத்து போலீஸார் எங்களை வழிமறித்தனர். உதவி ஆய்வாளர்கள் ஜெயராமன், சுரேஷ் மற்றும் பெயர் தெரியாத நபர் ஆகியோர் என் மகனிடம் 500 ரூபாய் கேட்டனர். செலுத்தும் தொகைக்கு ரசீது தந்தால் பணம் செலுத்துவதாகப் பிரகாஷ் தெரிவித்தான். ஆனால், ரசீதை போலீஸார் கொடுக்கவில்லை. அப்போது நடந்த வாக்குவாதத்தில் என்னுடைய மகனுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது போலீஸார் தகாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினர். பொதுமக்கள் முன்னிலையில் என்னையும் என் மகனையும் போலீஸார் தாக்கினர். அப்போது என்னிடம் போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டனர். இதையடுத்து, மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அப்போது மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு போலீஸாரும் என் மகன் பிரகாஷைத் தாக்கினார். அதன் பிறகு, பிரகாஷ்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தின்போது பெயர் தெரியாத பெண் போலீஸாரும் எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார். அப்போது, மயக்கமடைந்த என்னை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தால் நான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்ற எனக்கு கடந்த 3.4.2018-ல் ரத்த வாந்தி ஏற்பட்டது. அதோடு வயிற்றிலும் இதயப் பகுதியிலும் கடும் வலி இருந்தது. இதனால் நள்ளிரவில் மீண்டும் மயக்கமடைந்தேன். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கெனவே இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் சுமோட்டோவாகவே விசாரணைக்கு எடுத்துள்ளது. இருந்தபோதிலும் என் தரப்பு விளக்கத்தையும் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவே இந்த அபிடவிட்டை தாக்கல் செய்கிறேன். என் மகன்மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும். அதோடு, மாம்பலம் இன்ஸ்பெக்டர் பிரபு, உதவி ஆய்வாளர்கள் ஜெயராமன், சுரேஷ், பெயர் தெரியாத போக்குவரத்து பெண் போலீஸ், உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகன் பிரகாஷைத் தாக்கியதுக்கு நஷ்டஈடாக 25 லட்சம் ரூபாயும் எனக்கு 10 லட்சம் ரூபாயும் தர உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 சங்கீதா தாக்கல் செய்த மனுவில், தமிழக முதன்மைச் செயலாளர், மாவட்டக் கலெக்டர், சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் போக்குவரத்து (தெற்கு), தி.நகர் போக்குவரத்து துணை கமிஷனர், உதவி ஆய்வாளர் போக்குவரத்து ஜெயராமன், சுரேஷ், ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன், மாம்பலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரபு ஆகிய ஒன்பது பேர் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.