வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (07/04/2018)

கடைசி தொடர்பு:16:52 (07/04/2018)

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்தது ஏன்?- ஆளுநர் மாளிகை விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவே நடைபெற்றது என அளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் முக்கியமான கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வேறு மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்ததற்கு தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தமிழகத்தில் கல்வியாளர்கள் இல்லையா? ஏன் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை தருகிறீர்கள் என பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து தற்போது இவரின் நியமனத்துக்கான விளக்கத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், ''துணைவேந்தரின் தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது. இதில் தலையீடு ஏதும் இல்லை. நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரில் இவரே சிறந்து விளங்கினார். துணைவேந்தர் நியமன விதிகளின்படியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் நியமனத்தை அரசியலாக்க வேண்டாம். பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.