`தனிப்பட்ட முறையில் யாரும் பேச அனுமதி கிடையாது!’ - காவிரி போராட்டம் குறித்து பொன்வண்ணன் விளக்கம்

சென்றமுறை ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்க வளாகத்தில் மெளன அறப்போராட்டம் நடந்தது. அப்போது ரஜினி, கமல், அஜித் உள்ளிட்டோர் தவறாமல் கலந்துகொண்டனர். அதுபோலவே இப்போதும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கும் சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணனிடம் பேசினோம். 

பொன்வண்ணன்

''தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் காவிரி மேலாண்வை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும்   கண்டன அறப்போராட்டம் நடக்கிறது. வழக்கமாக காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை  6 மணிவரை அறப்போராட்டம் நிகழ்ந்து வந்தது. தற்போது காலை 9 மணியிலிருந்து 1 மணிவரை மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கி இருப்பதால் மதியம் 1 மணிக்கு போராட்டம் நிறைவுபெறும். பொதுவாக இதற்கு முன்பு நடந்த கூட்டங்களில் நடிகர்கள், நடிகைகள் ஒவ்வொருவரும் ஒலிபெருக்கி முன்னால் வந்து தங்கள் கருத்துகளைப் பேசினார்கள். தற்போது அப்படி நடத்தும் எண்ணமோ, திட்டமோ எங்களுக்கு இல்லை. நடிகர் சங்கம் நாளைய நிகழ்ச்சியில் தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது. 

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கக்கூடும் அவர்கள் எல்லோரையும் பேசவிட்டால் வெளியில் தவறான விமர்சனங்கள் எழுவதற்கு நாங்களே வழி வகுத்துக் கொடுத்தது போலாகிவிடும் ஆகையால், தனித்தனியாக ஒவ்வொரு நடிகர், நடிகையை பேச வைக்கும் திட்டம் எதுவும் கிடையாது. எங்களுடைய அறப்போராட்டத்தின் வாயிலாக கண்டனத்தைப் பதிவு செய்வது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே நோக்கம். பொதுமக்களின் அத்தியாவாசிய பிரச்னைக்காக அறப்போராட்டம் நடத்துகிறோம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளுங்கள் என்று முன்னணி நட்சத்திரங்கள் முதல் அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்தாகிவிட்டது.

கலந்துகொள்வதும், தவிர்த்துச் செல்வதும் அவரவர் விருப்பம். தமிழ்நாடு முழுக்க தீப்பற்றி எரியும் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை போன்றவை மிகவும் சென்சிட்டிவான பிரச்னைகள். இதன் பதிவுகள் மற்றும் இந்த விவகாரத்தின் விவரம் முழுமையாக தெரியாமல் ஆளாளுக்கு பொத்தாம் பொதுவாக ஏதாவது பேசினால் தேவையற்ற தர்ம சங்கடமும், குழப்பமும் ஏற்படக்கூடும். எனவே, அறப்போராட்டம் துவங்குவதற்கு முன்பு ஒரு அறிக்கை வாசிக்கப்படும், முடியும் தருவாயில் இன்னொரு அறிக்கை வாசித்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்படும்" என்று நம்மிடம் விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!