கதிராமங்கலம் மக்களைச் சந்திக்கச் சென்ற சேலம் மாணவி வளர்மதி தஞ்சாவூரில் கைது!

கதிராமங்கலம் மக்களை சந்திக்க வந்த சேலம் சட்டக் கல்லூரி மாணவி வளர்மதியை தஞ்சாவூரில் போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கதிராமங்கலம் மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற சேலம் மாணவி வளர்மதி உள்ளிட்ட ஆறு பேரை தஞ்சாவூரிலேயே  காவல்துறையினர் கைதுசெய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

வளர்மதி உள்ளிட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் நிலையம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு துண்டு பிரசுரம் வழங்கியதாக கூறி சுமார் ஒரு வருடத்துக்கு முன் கைதுசெய்து  குண்டர் சட்டத்தில் அடைத்தனர் காவல்துறையினர். பின்னர் வளர்மதி, குண்டர் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி விடுதலையாகி வெளியே வந்தார்.

இந்த நிலையில், இன்று கதிராமங்கலம் மக்களைச் சந்திப்பதற்காக வளர்மதி, புகழேந்தி என்கிற 3 வயது ஆண் குழந்தை, மகாலெக்ஷ்மி, குறிஞ்சிநாதன் உள்ளிட்ட மொத்தம் 6 பேர் மதுரையில் இருந்து பேருந்து மூலம் தஞ்சாவூர் வந்தனர். கதிராமங்கலம் செல்வதற்காக பேருந்து ஏறுவதற்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வளர்மதி உள்ளிட்டோரை போலீஸார் கைதுசெய்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து வளர்மதி வட்டாரத்தில் விசாரித்தோம். ``நாங்கள் கதிராமங்கலம் மக்களைச் சந்திப்பதற்காக வந்தோம். எங்களை `கலவரக்காரர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, அவர்களை தஞ்சாவூரிலேயே கைது செய்யச்சொல்லி உளவுத்துறையினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தாக’ கூறியதன் அடிப்படையில் எங்களைக் கைதுசெய்து வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

மக்களைச் சந்திக்க அனுமதி இல்லை என்றால், எங்களை தஞ்சாவூரை விட்டு வெளியே அனுப்புங்கள். இப்படி ஏன் எங்களை குற்றவாளிகள்போல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருக்கிறீர்கள். எங்களோடு வந்த 3 வயது குழந்தை என்ன பாவம் செய்தான்.எங்களைச் சந்திக்க வருபவர்கள் செல்போன்கூட எடுத்து வரக் கூடாது என போலீஸார் கெடுபிடி செய்கிறார்கள்.  உடனே எங்களை வெளியே அனுப்ப வேண்டும் என முறையிடுகிறோம். ஆனால், ஸ்டேஷன் வட்டாரத்தில், `உயர் அதிகாரியிடம் இருந்து தகவல் வந்தால்தான் வெளியே விட முடியும்’ என்கிறார்கள். இதை காவல்துறையின் கண்டிக்கத்தக்க செயல்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்’ எனக் கொந்தளிப்போடு பேசுகின்றனர்.

வளர்மதி கதிராமங்கலம் வரும் தகவல் கிடைத்ததும் பரபரப்படைந்த போலீஸார் கதிராமங்கலம் மக்களிடம் வளர்மதியை உள்ளே அனுமதிக்காதீர்கள். அவரை வரவேண்டாம் எனச் சொல்லுங்கள் என அழுத்தம் கொடுத்தார்களாம். காவலுக்கு அங்கே போலீஸாரையும் நிறுத்தியுள்ளார்கள். வளர்மதி கதிராமங்கலம் செல்வதற்கு முன்பே கைதுசெய்யப்பட வேண்டும் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததானாலேயே அவரைப் பிடித்து வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் வளர்மதி உள்ளிட்டவர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வரும் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!