வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (07/04/2018)

கடைசி தொடர்பு:18:20 (07/04/2018)

`இந்தி எழுத்துகள் அழிப்பு... பா.ஜ.க கொடி எரிப்பு!’ காவிரிக்காகத் திருச்சியில் தொடரும் போராட்டம்

காவிரிக்காக திருச்சியில் போராட்டம்
கடந்த ஒருவாரமாகத் திருச்சியில் பல்வேறு இடங்களில், விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் காவிரிக்காகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
இந்தி
 
அந்த வகையில் திருச்சியில் சமூக நீதிப்பேரவை ரவிக்குமார், காவிரி உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த கவித்துவன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ம.சின்னதுரை ஆகியோர் தலைமையில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள், `மண்டியிடாத மானங்கெட்ட அரசே, காவிரி எங்கள் உயிர் நீர்' என முழங்கினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் போராட்டக்காரர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
 
இதுபோல் திருச்சி தென்னூரில் மகாத்மா காந்தி பள்ளி அருகே உள்ள இந்தி பிரசார சபையை மக்கள் அதிகாரம் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி சரவணன் தலைமையிலான போராட்டக்காரர்கள் இந்தி பிரசார சபையின் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்ததுடன், கறுப்பு நிற மைபூசி அழித்தனர். மேலும், சிலர் பி.ஜே.பி கொடியையும் எரித்தனர்.
 
வானொலி
 
போராட்டத்தில் ஈடுபட்ட சரவணன் உள்ளிட்டோரை போலீஸார் தாக்க முற்பட்டனர். அப்போது போராட்டக்காரர்களில் இருந்த சிலர் பத்திரிகையாளர்களைத் தாக்க முற்பட அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாகப் போராட்டக்காரர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாகக் காவிரிக்காகப் போராட்டங்கள் தொடர்வதால் திருச்சி பரபரப்பாகவே காட்சியளிக்கிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க