வண்டலூரில் மதம்பிடித்த இரண்டு யானைகள்? - பாதுகாப்புக் கருதி வேறு இடத்துக்கு மாற்றம் 

யானை

Representational Image

சென்னை வண்டலூரில் உள்ள இரண்டு யானைகளுக்கு மதம் பிடிக்கும் அறிகுறிகள் தென்பட்டன. இதனால் இரண்டு யானைகளும் வேறு இடங்களுக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டன. 

இதுகுறித்து வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 4.1.2010-ல் கிருஷ்ணகிரி வனப்பகுதியிலிருந்து தாயால் கைவிடப்பட்ட ஆண் யானைக்குட்டி கொண்டு வரப்பட்டது. அதற்கு 'உரிகம்' என்று பெயரிடப்பட்டது. தொடர்ந்து, 20.3.2010-ல் ஜவலகிரி வனச்சரகம் கிருஷ்ணகிரியிலிருந்து இன்னொரு ஆண் யானைக் குட்டியும் கொண்டு வரப்பட்டது. அதற்கு 'கிரி' என்று பெயரிடப்பட்டது.

 வழக்கமாக ஆண் யானைகள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குள் முதிர்ச்சியடையும். அந்தச் சமயத்தில் யானைகளுக்கு மதம் பிடித்தலுக்கான அறிகுறிகள் ஏற்படும். தற்போது, உரிகத்துக்கு ஒன்பது வயதும் கிரிக்கு எட்டரை வயதும் ஆகிறது. இந்த இரண்டு யானைகளுக்கும் மதம் பிடித்தலுக்கான அறிகுறிகள் சில நாள்களாகத் தென்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதி இரண்டு யானைகளும் வனவிலங்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உரிகம் என்ற ஆண் யானை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வரகலியார் யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதுபோல கிரி என்ற ஆண் யானை முதுமலை யானைகள் முகாமுக்கு பணியாளர்களுடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு யானைகளும் இன்று முகாமுக்கு நல்லப்படியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏழு வயதாகும் அசோக் என்ற ஆண் யானைக்குட்டியும் இரண்டு வயதாகும் பிரக்குருதி என்ற பெண் யானைக்குட்டியும் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!