வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (07/04/2018)

கடைசி தொடர்பு:19:43 (07/04/2018)

அன்று பி.சி.சி.ஐ கொடுத்தது ஐந்து லட்சம், இன்று வாங்குவது 6 ஆயிரம் கோடி! #IPLTvRights

இந்தியாவில் விளையாட்டை வருமானமாக்க பல அமைப்புகளும் திணற, பல ஆயிரம் கோடிகளில் டீல் பேசுகிறது பிசிசிஐ. கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும், இன்று கிரிக்கெட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐதான்.

அன்று பி.சி.சி.ஐ கொடுத்தது ஐந்து லட்சம், இன்று வாங்குவது 6 ஆயிரம் கோடி! #IPLTvRights

இந்தியாவில் விளையாட்டை வருமானமாக்க பல அமைப்புகளும் திணற, பல ஆயிரம் கோடிகளில் டீல் பேசுகிறது பிசிசிஐ. கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும், இன்று கிரிக்கெட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐதான். 

பிசிசிஐ

1992-ம் ஆண்டு இந்தியா ஆடும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப, பிசிசிஐ நிர்வாகத்திடம் ஒரு மேட்சுக்கு 5 லட்சம் ரூபாய் கேட்டது பிசிசிஐ. ஆனால் இன்று, இந்திய கிரிக்கெட் அணி ஆடும் மேட்சுகளை தங்கள் சேனலில் ஒளிபரப்ப, 5 ஆண்டுகளுக்கு 6,128 கோடி ரூபாய் தர ஒப்பந்தம் போட்டிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். அதாவது, ஒரு மேட்ச்சை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிசிசிஐ-க்குக் கொடுக்கும் தொகை 60 கோடி ரூபாய். ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப, ஐந்து ஆண்டுகளுக்கு 16,347 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் ஆனது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை பண மழையில் குளிக்கவைக்க பல நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

டிவி ஒளிபரப்பு உரிமம்!

1991-ம் ஆண்டு வரை தூர்தர்ஷனுக்குப் பணம் கொடுத்துதான் போட்டிகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது பிசிசிஐ. 1991-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக இந்தியாவில் விளையாட வந்தது. அந்தத் தொடருக்குக் குவிந்த விளம்பரதாரர்களைப் பார்த்து மிரண்டது பிசிசிஐ. `நாம் பணம் கொடுத்து டிவி நிறுவனம் ஏன் சம்பாதிக்க வேண்டும்? பணம் மொத்தமும் நமக்கே வர வேண்டும்' என அப்போது பிசிசிஐ எடுத்த முடிவுதான் கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை விற்கும் முடிவு. அந்த முடிவுதான் இன்று பல ஆயிரம் கோடிகளை பிசிசிஐ-க்குப் பெற்றுத்தருகிறது. பிசிசிஐ-க்கு இப்போது மிகப்பெரிய வருமானமே டிவி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம்தான்.

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது பிசிசிஐ. அதுதான் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒப்பந்தம். ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப 10 ஆண்டுகளுக்கு 8,200 கோடி ரூபாய் டீல். இந்த மொத்தப் பணத்தையுமே முதல் இரண்டு ஐபிஎல் தொடர்களிலேயே சோனி பெற்றுவிட்டது என்பது மார்க்கெட் கணிப்பு. அதனால்தான் இப்போது வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஐபிஎல் உரிமத்தைப் பெற்றிருக்கிறது.

ஐசிசி-யின் ஷேரிங்!

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) தன்னுடைய உறுப்பு நாடுகளுக்கு லாபத்தில் பங்கு தரும். ஐசிசி-க்கு மிகப்பெரிய வருமானத்தைக் கொடுப்பதே இந்தியாதான் என்பதால் ``எங்களுக்கு அதிக ஷேர் வேண்டும்'' என்று கோரிக்கைவைத்தது பிசிசிஐ. அதனால் கிரிக்கெட்டின் மூன்று முக்கிய நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிக பங்கைக் கொடுக்கிறது ஐசிசி. இதன்படி பிசிசிஐ-க்கு ஆண்டுக்கு 21 முதல் 22 சதவிகிதம் வரை வருமானத்தில் பங்கு பிரித்துத் தருகிறது ஐசிசி.

பிசிசிஐ

டைட்டில் ஸ்பான்சர்!

விவோ ஐபிஎல், பேடிஎம் ரஞ்சி டிராஃபி, பேடிஎம் 20/20 சீரிஸ் என இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக பெரும்போட்டியே நடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு இந்தியாவில், இந்திய அணி ஆடும் எல்லா போட்டித் தொடர்களுக்குமே பேடிஎம்தான் ஸ்பான்சர். இதற்காக பேடிஎம் நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு 203.28 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா ஆடும் போட்டிகள் மொத்தம் 84. இதன்படி பார்த்தால், ஒரு மேட்ச்சுக்கு டைட்டில் ஸ்பான்சராக பேடிஎம் நிறுவனம் 2.5 கோடி ரூபாய் பிசிசி-ஐக்குத் தருகிறது.

டீம் ஸ்பான்சர்!

இந்திய அணியினரின் டி ஷர்ட்டில் இடம்பிடித்திருக்கும் வாசகத்துக்கே ஏகப்பட்ட டிமாண்டு. இப்போது இந்திய அணியின் டீம் ஸ்பான்சர் `ஓப்போ' என்னும் மொபைல் நிறுவனம். டீம் ஸ்பான்சராக பிசிசிஐ-க்கு ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தமாக 1,079 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது ஓப்போ நிறுவனம். 

பிசிசிஐ

கிட் ஸ்பான்சர்!

நைக்கி நிறுவனம் 2006-ம் ஆண்டு முதல், இந்திய கிரிக்கெட் அணிக்கு கிட் ஸ்பான்சராக இருக்கிறது. டி ஷர்ட்டில் சின்னதாகத் தெரியும் அந்த `டிக்' சிம்பளுக்காக நைக்கி நிறுவனம் பிசிசிஐ-க்குத் தரும் தொகை எவ்வளவு தெரியுமா? நான்கு ஆண்டுக்கு 370 கோடி ரூபாய். அதாவது ஒரு மேட்ச்சுக்கு நைக்கி நிறுவனம் தருவது 87 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

அதிகாரபூர்வ ஸ்பான்சர்!

இதுதவிர அதிகாரபூர்வ ஸ்பான்சர்களாக பெப்சி, ஹூண்டாய் மற்றும் ஜெயலட்சுமி ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் என மூன்று நிறுவனங்கள் பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களின் லோகோவும் இந்திய கிரிக்கெட் போட்டிகளின்போது மைதானத்தில் இருக்கும். இந்த மூன்று ஸ்பான்சர்களிடம் இருந்தும் நான்கு ஆண்டுகளுக்கு 150 கோடி ரூபாய் வருமானம் பெற்றிருக்கிறது பிசிசிஐ

இது அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் பணம்தான். இதுதவிர, ஏகப்பட்ட டீலிங்க்ஸ் இருக்கு மக்கா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்