`கரூர் மாவட்டத்தைத் தத்தெடுக்க தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளோம்!’ - அமைச்சர் தகவல் | We urges private firm to adopt Karur District, says Minister MR VIjayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (07/04/2018)

`கரூர் மாவட்டத்தைத் தத்தெடுக்க தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளோம்!’ - அமைச்சர் தகவல்

"அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக அதிக அளவு உகரணங்களை அசோக் லேலாண்டு நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்வதால்,அந்த நிறுவனத்தை கல்வி வளர்ச்சிக்காக கரூர் மாவட்டத்தை தத்தெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

 அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூர்-சேலம் புறவழிச்சாலையிலுள்ள அட்லஸ் கலையரங்கத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ,மாணவியர்கள் உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அவர்கள் தலைமையில் வழிகாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, நீட் போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் 108 மாணவ மாணவிகளுக்கு ரூ.13,36,016 மதிப்பிலான மடிக்கணினிகளை இன்று (7.4.2018) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மாணவ மாணவியர்களின் நலனில் அக்கறை கொண்டு காலணி முதல் மடிக்கணினி வரை 14 வகையான உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் 27,000 கோடி கல்வி வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி உள்ளது. அதன்மூலம், தமிழகத்தில் உயர் கல்வி செல்வோரின் எண்ணிக்கை 46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் 23 பள்ளிகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நடைபெறும் வழிகாட்டு நிகழ்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அதிக அளவில் உபகரணங்களை அசோக் லேலாண்டு நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்வதால், அந்நிறுவனத்தை கரூர் மாவட்டத்தைக் கல்வி வளர்ச்சிக்காகத் தத்தெடுக்க வலியுறுத்தியுள்ளோம். அதில் போக்குவரத்துத் துறை ஓட்டுநர், நடத்துநர், அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.