வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (07/04/2018)

கடைசி தொடர்பு:20:40 (07/04/2018)

`இந்தப் பயணம் முடியும் நேரத்தில் நல்ல முடிவு வரும்!’ முக்கொம்பில் சூளுரைத்த ஸ்டாலின்

`இந்தப் பயணம் முடியும் நேரத்தில் நல்ல முடிவு வரும்!’ முக்கொம்பில் சூளுரைத்த ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி முக்கொம்பில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கிய நடைப்பயணத்தை தோழமைக் கட்சிகளுடன் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். 

ஸ்டாலின்


நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பாக முக்கொம்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினுடன், அக்கட்சியின்  முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், வி.சி.கவின் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "காவிரி பிரச்னைக்காக ஆளும் கட்சியோடு இணைந்து செயல்பட நாம் எவ்வித கர்வமும் கொள்ளவில்லை. அவர்களுடன் இணைந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசைக் கண்டிக்கின்ற அருகதைகூட இந்த ஆட்சிக்கு இல்லை என்றால் அதைவிட வெட்கம் வேறு இல்லை. 
அடுத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த சட்டமன்ற கூட்டத்தில், காவிரிக்கான சிறப்புக் கூட்டமாக கூட்டி தீர்மானம் கொண்டு வந்தபோது, ஆட்சியில் இருப்பவர்கள், நாங்கள் கொண்டுவரும் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள், அதற்கு நாங்கள் உடன்பட்டோம். அப்போது நாங்கள், காவிரிக்காக இருக்கும் பிரச்னைகளை சுட்டிக்காட்ட வேண்டும். மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்ப முடியாத வக்கற்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் இல்லை என போராடி பேச அனுமதிப் பெற்றோம்.
அப்போது, அ.தி.மு.கவின் 50 எம்.பி-க்கள் ராஜினாமா செய்யதால், நாங்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளோம் என்றோம். அதேபோல் உங்கள் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தால் நாங்களும் 89 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்யத் தயார் என்றோம். ஆனால், அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசம் இருந்தபோது அலட்சியப்படுத்தினார்கள். கடந்த 29-ம் தேதி இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுத்துள்ளதாக கேள்வி எழுப்பியபோது, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பொறுங்கள் நல்ல முடிவு வரும் என்றார்கள். முடிவு கிடைத்ததா? அதேபோல் அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதை அறிவிக்க முடியாத  ஆட்சியாளர்களை நம்பி இனியும் பலனில்லை என காவிரிக்காக தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் பயணம் முடியும் நேரத்தில் நல்ல முடிவு வரும்" என்றார்.

இதையடுத்து முக்கொம்பு பகுதியில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கிய ஸ்டாலின், கல்லணை அருகில் உள்ள தோவூர் என்ற பகுதியில் இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். சில இடங்களில் பிரசார வாகனத்தில் இருந்தவாறு அவர் பேசவும் செய்கிறார். அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி நகருக்குள் செல்லும் வகையில் ஸ்டாலினின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திருச்சி நகருக்குள் சென்றால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க