காவிரிக்காகக் களத்தில் இறங்கிய பத்திரிகையாளர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

திருவள்ளூரில் பத்திரிகையாளார்கள் போராட்டம்

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் தினமும் வெவ்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட அனைத்துப் பத்திரிகையாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டனர். இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மாவட்டம் முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் திசை மாறியுள்ளன. நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ரயில் நிலையம், சுங்கச் சாவடிகள், அரசு மதுபானக்கடை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் மைல்கற்களில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எங்களின் போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளோம் என்றனர். ஆவடியில் தே.மு.தி.க. சார்பில் இன்று மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!