வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (07/04/2018)

கடைசி தொடர்பு:21:53 (07/04/2018)

திருச்சியில் இந்தியை அழித்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் 89 பேர் சிறையிலடைப்பு!

திருச்சியில் இந்தியை அழித்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் 89 பேர் சிறையிலடைப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சியில் இந்தி பிரசார சபாவின் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழித்த மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 89 பேர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

திருச்சியில் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த ஒருவாரமாகத் திருச்சியில் பல்வேறு இடங்களில், விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் காவிரிக்காகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக மத்திய அரசைக் கண்டித்து, போராட்டம் நடத்தி இந்தி பிரசார சபாவில் இருந்த பெயர் பலகை மற்றும் இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழித்து மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்த போலீஸார்,  திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தங்க வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை விசாரணை என்ற பெயரில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனியாக பிரிக்க போலீஸார் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், கைது செய்யப்பட்ட  அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 89 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க