வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (07/04/2018)

கடைசி தொடர்பு:20:34 (07/04/2018)

ராமதாஸ் நடத்தும் போராட்டத்துக்கு கைகொடுக்காதது ஏன்? வணிகர் சங்கங்கள் விளக்கம்!

காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் போராட்டத்துக்கு ராமதாஸ் அழைப்புவிடுத்துள்ளார். ``இதற்கு, கடையடைப்பு செய்யாமல் ஆதரவு தருவோம்'' என்று வணிகர் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.

ராமதாஸ் நடத்தும் போராட்டத்துக்கு கைகொடுக்காதது ஏன்? வணிகர் சங்கங்கள் விளக்கம்!

ராமதாஸ்

காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் போராட்டத்துக்கு ராமதாஸ் அழைப்புவிடுத்துள்ளார். ``இதற்கு, கடையடைப்பு செய்யாமல் ஆதரவு தருவோம்'' என்று வணிகர் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.

காவிரி நீருக்கான போராட்டம், தமிழகத்தில் நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தைக் கையில் எடுத்துவருகின்றன. கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல், பந்த், நடைப்பயணம் என்று தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். இதுதவிர மாணவ - மாணவியரும், விவசாயிகளும் களத்தில் இறங்கியுள்ளனர். திரைப்பட நடிகர், நடிகைகளும் காவிரிக்கு ஆதரவாக அறவழிப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

இந்த நிலையில், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்றது. அன்றைய தினமும், 5-ம் தேதி தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பொது வேலைநிறுத்தமும் நடத்தப்பட்டன. அப்போது வணிகர்கள், நல்ல ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை அடைத்து போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், வரும் 11-ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பாகப் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்த மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3-ம் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டமும், 5-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் பொது வேலைநிறுத்தமும் நடத்தப்பட்டன.

வெள்ளையன்

அதைத்தொடர்ந்து 11-ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. முந்தையப் போராட்டங்களைப் போலவே இந்தப் போராட்டத்துக்கும் பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் போராட்டத்துக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸால் கடவுளாக மதிக்கப்படும் அனைத்து உழவர்களும் ஆதரவளிக்க வேண்டும். கடையடைப்புப் போராட்டத்துக்கு வணிகர்களின் ஆதரவு மிகவும் அவசியமாகும். விவசாயம் இல்லாவிட்டால் வணிகம் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்'' என்று அதில் தெரிவித்துள்ளார். 

வரும் 11-ம் தேதி காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதா, கடைகள் அடைக்கப்படுமா என அந்த அமைப்பு நிர்வாகிகளிடம் பேசினோம்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையனிடம் பேசினோம். ``காவிரிக்காக கடையடைப்பு 11-ம் தேதி நடத்தப்படும் என்பதை நாங்கள்தான் முதலில் அறிவித்தோம். பிரதமர் மோடி அன்று சென்னை வருவதாக இருந்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாங்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்த நாளில் மோடி வருவாரா... வரமாட்டாரா... என்று உறுதி செய்யப்படாததால் அதை நாங்கள் கைவிட்டுவிட்டோம். இதனையடுத்து, அந்த நாளில் பா.ம.க. போராட்டம் அறிவித்தது. எனினும், எங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதற்காக கடந்த 5-ம் தேதி அநேக கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கடையடைப்பு நடத்தி போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தோம். இந்த நிலையில், மீண்டும் கடையடைப்பு என்பது எங்கள் வியாபாரிகளுடைய வாழ்வை இம்சை செய்வதாகும். அடுத்த மாதம், மே 5-ம் தேதி வணிகர் சங்க மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அன்றும் கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் 11-ம் தேதி கடையடைப்பு என்பது வணிகர்களை மிகவும் கொடுமைப்படுத்துவதாக இருக்கும். ஆகவே, இந்தப் போராட்டத்தில் கடையடைப்பு இல்லை என்றாலும், அவர்களுக்கு எங்களுடைய தார்மீக ஆதரவு உண்டு'' என்றார். 

விக்கிரமராஜா

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம். ``வணிகர்கள் சார்பாக கடையடைப்பு என்பது இரண்டு முறை செய்தாகிவிட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் மூலம் கடந்த 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து நாங்கள் பெரிய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டோம். இதுதவிர கடந்த 5-ம் தேதி, 13 கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்றுவிட்டோம். இனி வரும்காலங்களில், கடையடைப்பு  செய்யாத நிலை இருக்கிறது. இதனால், வணிகம் ஏறக்குறைய 60 சதவிகிதம் நலிவடைந்துள்ளது. இதன் காரணமாக, இன்னொரு முறை கடையடைப்பு செய்ய முடியாத நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, போராட்டம் நடத்தக்கூடியவர்கள் கடையடைப்பு இல்லாமல் எந்தப் போராட்டம் நடத்தினாலும் அதற்கு எங்களுடைய ஆதரவைத் தர நாங்கள் பரிசீலனை செய்கிறோம். அதேவேளையில், கடையடைப்பு  என்பதை  ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு வியாபாரிகளுடைய மனநிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்றார் மிகத் தெளிவாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்