வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (07/04/2018)

கருணாநிதி தொகுதியில் 2 ஆண்டுகளாகத் திறக்கப்படாத ரேஷன் கடை! கொதிக்கும் மக்கள்

திருவாரூர் மாவட்டம் கீழக்கூந்தகுடியில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமலே உள்ளது.

அமைச்சர் காமராஜ்

கீழக்கூத்தங்குடியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 8.20 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீட்டில் புதிய ரேசன் கடைக்கான கட்டடம் கட்டப்பட்டது. அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்தும்கூட இதைத் திறக்க அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். இதை திறக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். ``இங்கு 135 கார்டுகள் மட்டுமே உள்ளதாகவும் 150 கார்டுகள் இருந்தால்தான் திறக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இது உண்மையான காரணம் இல்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள். கட்டடம் கட்டும் முன்பே அதிகாரிகளுக்கு இது தெரியாதா? இன்னும் 15 கார்டுகள் வேண்டுமென்றால் இப்பகுதிக்கு அருகில் உள்ளவர்களின் கார்டுகளை இங்கு மாற்றி, கடையை திறக்க முடியும்.

கருணாநிதி

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியில் இக்கட்டடம் கட்டப்பட்டது. இதனால்தான் உணவுத் துறை அமைச்சர் காமராஜின் தலையீட்டினால் கடையைத் திறக்க அதிகாரிகள் மறுக்கிறார்கள். இது மிகவும் அநாகரிகமானது. இவர்களது இழிவான அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நாங்களா பலியாக முடியும்?. இங்கு கடை இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள ரேசன் கடையில் பொருள்களை வாங்கி வருகிறோம். மக்களின் வரிப்பணம் 8 .20 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கட்டடம் இப்படி முடங்கி கிடக்கலாமா” என ஆதங்கப்படுகிறார்கள்.