`அரசை கேள்வி கேட்கும் திறமை வழக்கறிஞர்களுக்கு உண்டு!’ - உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

வழக்கறிஞர்களுக்கு அரசை கேள்வி கேட்கும் திறமை உண்டு எனவும், வழக்கறிஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டுமெனவும் பரமக்குடியில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கூறினார்.

வழக்கறிஞர்களுக்கு அரசை கேள்வி கேட்கும் திறமை உண்டு எனவும், வழக்கறிஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டுமெனவும் பரமக்குடியில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கூறினார்.

பரமக்குடி நீதிமன்ற விழாவில் பங்கேற்ற நீதிபதி முரளிதரன்

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாய்தள நடைபாதை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவுக்கு ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கயல்விழி தலைமை தாங்கினார். பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி வரவேற்றார். சாய்தள நடைபாதையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குத்துவிளக்கு ஏற்றி, திறந்து வைத்தார். 

விழாவில் பேசிய நீதிபதி முரளிதரன், ''பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அனைவரும் ஒரே சங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது. வழக்கறிஞர்கள் செய்யக்கூடிய வேலையை தொய்வு இல்லாமல் நேர்மையாக திறம்படசெய்து முடிக்க வேண்டும். பரமக்குடி நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, குறைகள் பற்றி தெரிவிக்கும் போது அதை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசை கேள்வி கேட்கும் திறமை வழக்கறிஞர்களுக்கு உண்டு. பரமக்குடியில் மகளிர் நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும். வழக்கறிஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்'' என்றார். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், விரைவு நீதிமன்ற நீதிபதி அனில்குமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!