வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/04/2018)

கடைசி தொடர்பு:23:00 (07/04/2018)

`மக்கள் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது' - ஜி.கே.வாசன் தாக்கு

மக்களின் கவலையைப் போக்க அரசு தவறியதால்தான் மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் போராட்டங்களை அரசு வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.,வாசன் தெரிவித்துள்ளார்.

`மக்களின் கவலையைப் போக்க அரசு தவறியதால்தான் மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் போராட்டங்களை அரசு  வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது' என தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். 

gk vasan meet to peopls in kumarediyapuram

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது மற்றும் தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 55 வது நாளான இன்று ஜி.கே.வாசன் போராட்டக் களத்தில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”துாத்துக்குடியில் நிலம், நீர், காற்று மற்றும் கடல் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மக்களுடைய கோரிக்கை நியாயமானது. இந்த ஆலையின் விரிவாக்கத்தை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் ஆலையின்  இயக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து மூட வேண்டும்.

 போராட்டத்துக்கு ஆதரவளித்த ஜி.கே.வாசன்

தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது என மக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமை. இந்த அரசுகள் தங்களின் கடமையைச் சரியாக செய்திருந்தால், மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். 55 நாள்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை அரசின் அதிகாரிகள் ஒருவர்கூட  நேரில் வந்து சந்திக்காதது அவர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மக்கள் போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் அடிமைகளாகச் செயல்படுகிறார்கள். இங்கு நடப்பது  காமராஜர் ஆட்சி இல்லை. தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. எல்லாப் பிரச்னைக்கும் ஒட்டுமொத்த தீர்வு  வேண்டுமென்றால்,  எல்லோரும் ஒருமித்த கருத்துடன் போராட வேண்டும். அவரவர் பிரச்னைகளுக்குத் தனித்தனியாக போராட்டம் நடத்தக் கூடாது.  ஆலையை வைத்து கட்சியினர்கள் யாராவது ஆதாயம் பெற்றிருந்தார்கள் என்றால் ஆலையினால் ஏற்பட்ட பாதிப்பையும், உண்மையையும் உணர்ந்து படிப்படியாக ஆலையை மூடிட அவர்களும் மக்களுடன் இணைந்து போராட வேண்டும். ”என்றார். தொடர்ந்து, போராட்டக்களத்தில் மக்களுக்கான சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க