வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (08/04/2018)

கடைசி தொடர்பு:16:27 (27/06/2018)

கொளுத்தும் கோடை வெயில்..! மண்பானை விற்பனை அமோகம்

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளித்து குளிர்ந்த நீரை பருகும் பழக்கத்தை வழக்கப்படுத்தவும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும முயற்சியாகவும் சந்தைகளில் குவிக்கப்பட்டுள்ள குழாய் பொருத்தப்பட்ட நவீன மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழக கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே மண்பானை, சட்டிகள் என்பதெல்லாம் அவர்களின் வாழ்வியலோடு கலந்த ஒன்றாகும். அவ்வகையில் மண்பானையில் சமைக்கும் சோறும், அப்பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடையது. அது ஒரு எனர்ஜி ட்ரிங்க் கூட. குடி தண்ணீருக்கும் அது பொருந்தும். பானைகளில் இயற்கை முறையில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் உடல் சூட்டையும் தாகத்தையும் தணிக்க வல்லது. அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து, மண்பானைகளில் குளிர்ந்த குடிநீரை வைத்திருப்பார்கள். அதேபோல், திருவிழாக் காலங்களில் நீர்மோரும், பானகமும் மண்பானைகளில் வைத்து வழங்கப்பட்டன.

தற்போதைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பானைகள் மற்றும் ஈயப்பாத்திரங்களின் வருகையால் மண்பானைகளின் பயன்பாட்டை மக்கள் மறந்தே போனார்கள். ஆனாலும், சமீப காலமாக இயற்கை விவசாயம், செக்கு எண்ணெய் என மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கான வழிகளில் தன்னெழுச்சியாக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதால், மீண்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் மண்பானைகளை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு, மண்பாண்டத் தொழிலாளர்கள் புதுப்புது பானை ரகங்களை தயார் செய்கின்றனர்.

கடந்த 30 -ஆண்டுகளில் இல்லாத வெயிலின் தாக்கம் இந்தாண்டு இருக்குமென வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே மக்களை எச்சரித்துள்ளது. இதனால் வெயிலைச் சமாளிக்கும் வகையில், குளிர்ந்த நீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொள்ளவே பொதுமக்கள் விரும்புகின்றனர். அதற்கு அவர்கள் நாடுவது மண்பாண்ட பொருட்களையே. இதற்கேற்ற வகையில் குழாய் பொருத்திய நவீன மண்பானைகள், சாதா மண் பனைகள்  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர் கடை வீதிகளில் விற்பனைக்குக் குவிந்துள்ளன.
இதனுடன் சமையலுக்கு பயன்படுத்தும் மண்சட்டிகள், உண்டியல், திருஷ்டி பானைகள் என பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இதில் நவீன மண்பானைகள் குறைந்தபட்சம் ரூ.120 முதல் அதிக பட்சம் ரூ.250 வரையிலும், அதேபோல் சிறிய ரக பானைகள், டம்ளர், ஜக், ஜாடி மற்றும் உண்டியல்கள் போன்றவைகளும் ரூ.40 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து மண்பானை விற்பனையாளர்  கூறுகையில், "கோடைக்காலம் என்பதால் ஏழைகளின் பிரிட்ஜ்-ஆக மண்பானைகள்தான். இதில் இயற்கையான முறையில் குளிர்ந்த நீரை பருக முடியும். அதேபோல், மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவியாகும். பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து 2 முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்தத் தண்ணீரில் உள்ள தீய கிருமிகளை மண்பானை உறிஞ்சி அழித்துவிடும்.  தற்போது கோடைக்காலம் என்பதால் மண்பானைகளையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால், பொதுமக்கள் விரும்பும் பல்வேறு ரகங்களில் மண்பானைகள் தயார் செய்து வருகிறோம். அதிலும், குழாய் பொருத்தப்பட்ட நவீன மண்பானைகளையே ஆர்வத்துடன் அதிகம் பேர் வாங்கிச் செல்கின்றனர். தற்போதைய நிலையில் பானை செய்வதற்கான மண்வகைகள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்பானைகளை உருவாக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் விலையையும் தரத்திற்கேற்ப உயர்த்த வேண்டியுள்ளது' என்றார்.