வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (08/04/2018)

கடைசி தொடர்பு:02:00 (08/04/2018)

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் ராமேஸ்வரம் வந்த துருக்கி ஆசாமி கைது..!

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் வந்த துருக்கி நாட்டு ஆசாமியை ராமேஸ்வரம் துறைமுக போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் ராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டு ஆசாமியை அப்பகுதி துறைமுக போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக ராமேஸ்வரம் வந்த துருக்கி ஆசாமி.

ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து வந்த படகு ஒன்றிலிருந்து மர்ம நபர் இறங்கியதாக துறைமுக பகுதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸார் அங்கு சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவரை பிடித்து விசாரித்தனர். 

இந்த விசாரணையில், அந்த ஆசாமி துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் மகிர் தேவ் ரிம் (43) எனவும் தெரியவந்தது. மேலும் துருக்கி அரசுக்கு எதிரான இயக்கம் ஒன்றை சேர்ந்த மகிர் தேவ் ரிம் கடந்த 1993-ம் ஆண்டு துருக்கியில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்ததும், கடந்த மாதம் 23-ம் தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு சென்றதும் தெரிய வந்தது. இலங்கையில் யாழ்ப்பானம் பகுதியில் தங்கியிருந்த அவர் அங்குள்ள மீனவர்களிடம் இந்தியாவுக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து இலங்கை ரூபாய் 25 ஆயிரத்தினை மகிரிடம் இருந்து வாங்கி கொண்டு அவரை நேற்று இரவு படகு மூலம் ராமேஸ்வரம் பகுதிக்கு ஏற்றி வந்து சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து மகிர் தேவ் ரிம்மை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டினையும் கைபற்றினர். இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்திய கடல் பகுதியில் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் மாநில கடலோர பாதுகாப்பு குழுமம் என பல்வேறு பாதுகாப்பு பிரிவுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த படகின் மூலம் வெளிநாட்டை சேர்ந்த நபர் ராமேஸ்வரம் பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வினையே காட்டுகிறது.