“தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க!” - புலம்பும் வாகன ஓட்டுநர்கள்

ஓட்டுநர்கள்

தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச் செல்லும் வாகனங்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை கர்நாடகாவிற்குச் செல்லமாட்டோம் என தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்க அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈரோடு நந்து பேசுகையில், “டூரிஸ்ட் பஸ், டூரிஸ்ட் வேன், கார், லாரி, பால் வண்டி என எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்குச் சென்று வருகின்றனர். தற்போது இரண்டு மாநிலங்களுக்கும் இடையே காவிரிப் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக வாகனங்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் கர்நாடகாவில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.

ஓட்டுநர்கள்இரவு நேரங்களில் கர்நாடகப் பகுதிகளில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கும்போது, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். வண்டி நம்பர் பிளேட்டில் தமிழ்நாடு என இருந்தாலே, வண்டியினுடைய கண்ணாடி, ஹெட்லைட்டை உடைச்சிடுறாங்க. தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க. தற்போது, எங்களுடைய ஓட்டுநர்கள் 200 பேர் கர்நாடகாவில் இருக்காங்க. அவங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாதுன்னு, அவங்க எல்லாத்தையும் கிளம்பி தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லிட்டோம். 

கர்நாடகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாகனங்கள் மீதும், டிரைவர்கள் மீதும் நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். அதேவேளை, கர்நாடகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு ஆதரவாக, செவி சாய்க்காத தமிழக அரசையும் கண்டிக்கிறோம். உடனே, பாதிக்கப்பட்ட டிரைவர்களுக்கு மருத்துவ உதவியும், தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச் சென்ற ஒட்டுனர்களுக்கு உரிய பாதுகாப்பையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாடு அனைத்து வாகனங்கள் ஓட்டுனர் சங்கத்திலிருந்து சங்க உறுப்பினர்கள் யாரும் கர்நாடகத்திற்கு எந்த வகையான வாகனத்தையும் இயக்க மாட்டோம் என்ற முடிவையும் எடுத்திருக்கிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!