வர்த்தக நலன்களை பாதுகாக்க டபிள்யூ.டி.ஓ-வை அணுக வேண்டும் - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு!

சுரேஷ் பிரபு

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகரீதியில் கடுமையான மோதல் நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க, உலக வர்த்தக அமைப்பை மத்திய அரசு நாட வேண்டும் என்று இந்திய வர்த்தகம், தொழில் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருக்கிறார். மேலும் ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், அதன் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் பல்வேறு மோதல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில்,"உலகளாவிய வர்த்தக உறவுகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் கிடைக்கும் பலன்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். வர்த்தகப்  பாதுகாப்புடன் கூடிய நாடுகளின் மோதல் போக்கால் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும்.

இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான வரியை அமெரிக்க அதிகரித்தபோது, இந்தியாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, இதுபோன்ற பாதிப்புகளை அடையும் போது, நிவாரணத்திற்காக உலக வர்த்தக நிறுவனத்தை நாட வேண்டும். அந்த வகையில் இந்தியாவும், அதுபோன்ற பாதிப்புகள் உருவாகும்பட்சத்தில் டபிள்யூ.டி.ஓ-வை அணுக வேண்டும். 

புதிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு இந்தியா திட்டம் தீட்டி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. என்றாலும், அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!