‘திரும்பிய இடமெல்லாம் மஞ்சள் வாசனை!’ - குளிர்ந்துபோன கொண்டாட்டம்

மாநகரம்

ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் இறுதி நிகழ்வாக மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய மாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில், பங்குனி மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை பூச்சாட்டுதலுடன் விழா ஆரம்பிக்கும். பின் அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு பூஜை, கரகம் எடுத்தல், குண்டம் இறங்குதல் மற்றும் தேரோட்டம் என திருவிழா களைகட்டும்.

மாநகரம்

அந்தவகையில், இந்தவருடம் ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் திருவிழா கடந்த மார்ச் 20-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 24-ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி, ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. அதனையடுத்து திருவிழாவின் இறுதி நிகழ்வான கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

மாநகரம்

இதற்காக, பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களில் நடப்பட்டிருந்த கம்பங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வாய்க்காலில் விடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜாதி, மத, இன வேறுபாடுன்றி ஈரோட்டிலுள்ள அனைத்து மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விநாயகர், முருகன், சிவன் போன்ற பல கடவுள்களின் வேடங்களை அணிந்த பக்தர்கள் நகரில் ஊர்வலமாக வந்தனர்.  

மாநகரம்

மேலும், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட அந்தக் கம்பங்களுக்கு பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி வழிபட்டனர். மேலும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். இதனால் நகர் முழுவதும் திரும்பிய இடங்களிலெல்லாம் மஞ்சள் வாசனை வீசியது. மேலும், மாநகர் முழுக்க குளிர்ந்துபோனது. இந்த மஞ்சள் நீரால் வெய்யிலினால் ஏற்படும் அம்மை, கொப்புளம் போன்ற நோய்களை பெரிய மாரியம்மன் தடுக்கிறாள் என மக்கள் நம்புகிறார்கள்.  

இந்த நிகழ்ச்சிக்காக, நகரின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், நகரின் போக்குவரத்து மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!