இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் களைகட்ட காரணம் இதுதான்! | Tamilnadu government alloted fund for school annual celebrations

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (08/04/2018)

கடைசி தொடர்பு:12:11 (08/04/2018)

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் களைகட்ட காரணம் இதுதான்!

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு, இந்த வருடம் அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் களைக்கட்டி இருக்கிறது. அதற்குக் காரணம், ஆண்டுவிழாக்களை நடத்தும்படி அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசே தனியாக நிதி ஒதுக்கி இருப்பதுதான்.


ஆண்டுவிழா

"அந்த நிதி ஒதுக்கீடு அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளியின்  மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கும் ஆண்டுவிழா நிதி ஒதுக்கவேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைக்கிறார், நா.சண்முகநாதன் என்பவர். இவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர்.

அவர் நம்மிடம் பேசுகையில்," இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வு, பள்ளிகளுடனா பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டு அதிகரிப்பு, பள்ளிக் குழந்தைகளின் தனித்திறன்களை மேம்படுத்தல், ஆகிய காரணங்களை முன்வைத்து, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்  ஆண்டு விழாக்களை நடத்தத் தமிழக அரசு நிதி வழங்குவதை வரவேற்கிறோம். 1ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளில் 80 க்கும் அதிகமாகக் குழந்தைகள்  இருந்தால் ரூபாய் 5,000, குழந்தைகளின் எண்ணிக்கைக்கு 120க்கு  மேல் இருந்தால் ரூபாய் 8,000, குழந்தைகள் 200க்கு அதிகமாக இருந்தால் ரூபாய் 10,000 , ஆண்டுவிழா நிதி தரப்படுகிறது. அதைப்போலவே, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 120 க்கும் மேல் இருந்தால்,ரூபாய் 8,000, மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 200-க்கும் மேல் உள்ள பள்ளிக்கு ரூபாய்  10,000  நிதி ஒதுக்கியுள்ளார்கள். தமிழகத்தில் உள்ள 7295 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மொத்தம்  559.67 லட்சம் வழங்கித்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டுவிழா  கொண்டாட அனுமதி அளித்துள்ளது அரசு. குழந்தைகளின் எண்ணிக்கை 80க்கும் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், குழந்தைகளின் எண்ணிக்கை 120 க்கும் குறைவாக உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு விழாக்களைக் கொண்டாட நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. அந்தப் பள்ளிகள் ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு அருகிலுள்ள தனியார், தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை பெற்று நடத்தும்படி அரசு அறிவித்துள்ளது.  மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கி  மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பது ஒரு தலைபட்சமான நடவடிக்கை. இது  பெரும்பாலான ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளி மாணவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. மாணவர்களின் சேர்க்கை மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்  நோக்கில் குறைவாக குழந்தைகள் உள்ள பள்ளிகளுக்குத்தான் இந்த நிதி வழங்கப்பட வேண்டும்.  அடுத்த கல்வி ஆண்டிலாவது இந்தக்குறையைப் போக்கி,நிதி ஒதுக்கிட வேண்டுமென்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.