வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (08/04/2018)

கடைசி தொடர்பு:13:39 (08/04/2018)

பத்திரிகையாளர்களை தாக்கிய தே.மு.தி.க.வினர்! - ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சலசலப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் களத்தில்  பத்திரிக்கையாளர் மற்றும் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 நிருபர்களைக் கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 56வது நாளாகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தே.மு.தி.க, கட்சியைச் சேர்ந்த பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் சுதீஷ் வந்தனர்.

போராட்டக் களத்திற்கு வந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பிய பிரேமலதா, ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களைப் பேச சொன்னார். பின், பேசத் துவங்கிய பிரேமலதா, துவக்கம் முதலே மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதை விட தே.மு.தி.க.,விற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

" உங்களது குறைகளை மத்திய மாநில அரசுகளிடம் கேப்டன் கொண்டு செல்வார். தி.மு.க., அ.தி.மு.க., தவிர்த்து ஒருமுறை தே.மு.தி.க.,விற்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். விவசாயிகளின் நன்மைக்காக இதைச் செய்யுங்கள்." என்றார். 

உடனே, கிராம மக்கள், ஆலையால் பாதிக்கப்படுவதாக சொல்லப்படும் நிலத்தடி நீரை பிரேமலதாவிடம் கொடுத்தனர். உடனே, அதை வாங்கி கட்சி நிர்வாகிகளிடம் கொடுத்த பிரேமலதா, " இதனை ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையை எங்கள் நிர்வாகி உங்களிடம் கொடுப்பார்." என்றார்.

"எந்த மீடியாவும் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் காட்டவில்லை" எனக் கூட்டத்தில் ஒருவர் சொல்ல., அதற்கு பிரேமலதா, " இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பி வருவது எங்களது கேப்டன் டி.வி.மட்டுமே. " என 4  முறை தொடர்ந்து சொன்னதுடன், உள்ளூர் கேப்டன் டி.வி.நிருபரை அழைத்து அறிமுகப்படுத்தினார். முதல் 3 முறை வேறெந்த ஊடகங்களும் போராட்டத்தை ஒளிபரப்பவில்லை என்று சொன்னபோது,  வழக்கமான அவதூறு என அமைதியாக இருந்த பத்திரிக்கையாளர்கள், 4வது முறை, "நான் இங்கு வந்ததால்தான் மீடியாக்கள் இங்கு வந்திருக்கிறார்கள்" என சொன்னபோது எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தனியாக நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து, பெண் நிர்வாகிகள் உட்பட தே.மு.தி.க.வினர் தகாத வார்த்தைகளில் பேசினர். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கும் தே.மு.தி.க.,வினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், தொலைக்காட்சி நிருபர்கள் 3 பேரை சரமாரியாகத் தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுக நயினார் உள்ளிட்ட கட்சியினர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க