வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (08/04/2018)

கடைசி தொடர்பு:15:11 (08/04/2018)

நள்ளிரவில் பற்றி எரிந்த யூக்கலிப்டஸ் காடு! - அச்சத்தில் புதுக்கோட்டை மக்கள்

பரம்பூர் சாலையில் அரசு வனத்துறைக்குச் சொந்தமான காட்டில் தீ பற்றிக் கொண்டதால்  பரபரப்பு பற்றிக்கொண்டது.


புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலை அருகே, பரம்பூர் சாலையில் அரசுக்குச்  சொந்தமான அண்ணாபண்ணை உள்ளது. இதை ஒட்டிய பகுதி முழுவதும் யூக்கலிப்டஸ் எனும் தைலமரக்காடுகள் பெரும் ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இங்கு நேற்று நள்ளிரவு (07.04.2018) திடீரென தீப்பற்றிக்கொண்டது. கொழுந்து விட்டு எரிந்த தீ, அப்போது வீசிய காற்றின் விளைவால் மளமளவெனப் பரவியது.

குடியிருப்புகளும் ஆள் நடமாட்டமும் இல்லாத பகுதி அது என்பதால், முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவோ, எச்சரிக்கை செய்யவோ முடியாத சூழல் நிலவியது. அந்த வழியாக டூவீலரில் சென்ற இளைஞர்கள் காட்டில் தீப்பற்றி எரிவதை வீடியோ எடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறை வீரர்களுக்கும் வனத்துறை அலுவலர்களுக்கும் வாட்ஸ்அப் செய்திருக்கிறார்கள். தவிர,போன் செய்து தகவலும் சொல்லி இருக்கிறார்கள். தகவலறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை நகர தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்கு  நடுவே அந்தத் தீயை அணைத்தனர். 

இதுகுறித்து பரம்பூர் பகுதி மக்கள் கூறும்போது,"புதுக்கோட்டை  மாவட்டம் முழுவதும் தற்சமயம் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் அடிக்கடி தீவிபத்துக்கள் மாவட்டம் முழுக்க நடப்பது வாடிக்கையான நிகழ்வாக மாறிவிட்டது. சில வாரங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை நகராட்சிக்குச் சொந்தமான தீவனப்பண்ணையில் தீப்பிடித்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூத்தினிப்பட்டியில் நெல் மூட்டைகள் எரிந்து சாம்பலானது. அதேபோல், எருக்குமணிப்பட்டியில் வைக்கோல் ஏற்றிச்சென்ற மாட்டுவண்டியில் மின்கம்பி உரசி, தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கள் இயற்கையாகவும் சில விசமிகள் தீவைப்பதாலும் ஏற்படுகிறது. குரங்கணி மலை தீவிபத்தில் காடே பற்றி எரிந்து,15-க்கும் மேற்பட்ட பொம்பளைப் பிள்ளைங்க இறந்ததை டிவிலேயும் பேப்பர்லேயும் பார்த்ததிலிருந்து, சின்ன தீவிபத்து ஏற்பட்டாலே பகீர்னு இருக்கு. இந்த தைலமரக்காட்டு பகுதிகளில் உள்ள மரத்தின் இழைகள் உதிர்ந்து சருகாக காய்ந்து கிடக்குது. மரமும் அடிக்கிற வெயில்ல கருவாடா காய்ந்து நிற்குது. இதனால் ஏற்பட்ட காற்றின் உராய்வில்  திடீரென தீப்பற்றி எரிந்து இருக்கலாம். ஆனாலும் இந்தத்  தீவிபத்து இயற்கையானதா? இல்லே, சாலை ஓரத்தில் கிடந்த இழை சருகுகளில் யாராவது குடித்துவிட்டு தீ வைத்துவிட்டுச் சென்றார்களா என்பதை போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்"என்றார்கள். இதனால் அப்பகுதியில் நள்ளிரவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.