வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (08/04/2018)

கடைசி தொடர்பு:16:30 (08/04/2018)

`3 கோரிக்கைகள்.. 3 சவப்பெட்டிகள்!' - இடிந்தகரை மக்களின் நூதன போராட்டம்

இடிந்தகரை கிராமத்தினர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சவப் பெட்டிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

இடிந்தகரை கிராமத்தினர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சவப்பெட்டிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

எதிர்ப்பு போராட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள கிராமம், இடிந்தகரை. அணு உலை எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த இந்த கிராம மக்கள், இன்று சவப்பெட்டிகளுடன் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை கவரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு, சரக்குப் பெட்டக வர்த்தக முனையத்தை கன்னியாகுமரி அருகே அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைக்காக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த 3 கோரிக்கைகளைக் குறிக்கும் வண்ணம் இடிந்தகரை கிராமத்தினர் மூன்று சவப்பெட்டிகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் மூன்று சவப்பெட்டிகளையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். இடிந்தகரையில் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக உள்ள மைதானத்தில் நடந்த இந்த போராட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.