வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (08/04/2018)

`20 மாத ஆட்சியில் 77,500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!’ - கேரள முதல்வர் பெருமிதம்

கேரளாவில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், கடந்த 20 மாதத்தில் மட்டும் 77,500-க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், கடந்த 20 மாதத்தில் மட்டும் 77,500-க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு - பினராயி விஜயன்

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி கடந்த 2016-ம் ஆண்டு மே 25-ம் தேதி பொறுப்புக்கு வந்தது. மாநிலத்தின் முன்னேற்றம் தொடர்பான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் கேரள அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பல்வேறு தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு முக்கியத்தும் அளித்து வருவது தெரிய வந்துள்ளது. 

இந்தநிலையில், கேரளாவில் கடந்த 20 மாத காலத்தில் 77,569 பேருக்கு வேலை வாய்ய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், 2016-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 77,569 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார். 

இதில், கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக 64,982 பேருக்கும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக 12,587 பேருக்கும் வேலைக்கான சான்று வழங்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான இதே காலகட்டத்தில் முந்தைய ஆட்சியின்போது 48,951 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காடியுள்ளார். 

மாநிலத்தில் காலியாக இருக்கும் அரசு வேலையிடங்கள் குறித்து அறிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதால், உடனுக்குடன் வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அத்துடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு நடத்தப்படுவதால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.