கோவை கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் கவர்னர் பெயர்!

கோவை, காளப்பட்டி கூட்டுறவு சங்கத்தேர்தலில், வாக்காளர் பட்டியலில் கவர்னரும் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, காளப்பட்டி கூட்டுறவு சங்கத்தேர்தலில், வாக்காளர் பட்டியலில் கவர்னரும் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் கவர்னர் பெயர்

கோவை, காளபட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.  இதில் கூட்டுறவு சங்கத்தில் 11  உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 4,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதற்கான வாக்காளர் பட்டியல், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் 119 வரிசை எண்ணில், வாக்காளர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்,  கவர்னர் தமிழ்நாடு அரசு எனவும், அப்பா பெயர் என்ற இடத்தில் கவர்மென்ட் என்றும், முகவரியில் தமிழ்நாடு எனவும்  அச்சிடப்பட்டுள்ளது. கோவை முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவிதமான கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறாமலே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 27-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தேர்தலில் வெற்றி பெற பல்வேறு மோசடிகளை ஆளுங்கட்சியினர் செய்து வருவதாகவும், பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியினரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளில் பெயர் மற்றும் படங்கள் மாறி அடுத்தடுத்து சர்ச்சையைக் கிளப்பின. அந்தவரிசையில், தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்காளர் பட்டியலிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, "கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதன்முதலில் கோவையில்தான் ஆய்வு செய்தார். அந்தப் பாசத்தில்தான் அவரது பெயரையும் சேர்த்திருப்பார்கள்" என எதிர்க்கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!