விவசாயியிடம் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யச் சென்ற விவசாயியை ஏமாற்றி 40 லட்சம் ரூபாயை மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யச் சென்ற விவசாயியை ஏமாற்றி 40 லட்சம் ரூபாயை மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விவசாயியிடம் மோசடி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நல்லான்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயியான இவருக்கு வள்ளியூர் சாமியார்பொத்தை அருகில் 2 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கடன் உள்ளிட்ட சொந்தப் பிரச்னை காரணமாக அந்த இடத்தை கணேசன் விற்பனை செய்தார். அந்த இடம் ரூ.1.74 கோடிக்கு விற்பனையானது. அந்தப் பணத்தில், கடனை அடைத்த கணேசன், எஞ்சிய பணத்தை வங்கியில் பத்திரப்படுத்த முடிவு செய்தார். 

அவருக்குரிய இடத்தை விற்பனை செய்வதற்கு வைகுண்டதாஸ், ராஜேஷ் ஆகியோர் தரகராகச் செயல்பட்டுள்ளனர். விவசாயி கணேசனின் அறியாமையைப் பயன்படுத்தி அவரை மோசடி செய்யத் திட்டமிட்டு, கணேசனை வள்ளியூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வங்கியின் மேலாளரான முத்துசாமியுடன் சேர்ந்து சதி செய்துள்ளனர். அதன்படி மேலாளரான முத்துசாமி, கணேசனின் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை காட்டியிருக்கிறார். 

அதற்கு கணேசன் சம்மதித்த நிலையில், அவரிடம் இருந்து 42 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். கணேசனுக்கு படிக்கத் தெரியாது என்பதால், அவரிடம் வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டதுடன், வெறும் 2 லட்சம் ரூபாயை மட்டுமே டெபாசிட் செய்து விட்டு எஞ்சிய 40 லட்சம் ரூபாயை பங்கு வைத்துப் பிரித்துக்கொண்டனர். இரு தினங்களுக்குப் பின்னரே கணேசனுக்கு, தான் ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வங்கி மேலாளரிடம் கணேசன் கேட்டதற்கு, உரிய பதிலைச் சொல்லாததுடன், ஒரு கட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த அவர் வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீஸார், வங்கி மேலாளர் முத்துசாமி உள்ளிட்ட 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி மேலாளரே விவசாயியை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!