வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/04/2018)

கடைசி தொடர்பு:07:41 (09/04/2018)

`இந்தியாவுக்கு வெளியில் ஆசியக் கோப்பை!’ - போர்க்கொடி உயர்த்தும் பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக வேறு ஒரு நாட்டில் நடத்துமாறு ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலை வலியுறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) திட்டமிட்டுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி

ஆசியக் கோப்பை தொடர் வரும் செப்டம்பரில் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்த வாரத்தில் நடைபெற இருக்கிறது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்கிற முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், ஆசிய எமெர்ஜிங் நேஷன்ஸ் கோப்பைத் தொடரை பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடத்த வேண்டும் என பி.சி.பி. வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

அந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்காவிடில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஆசியக் கோப்பை தொடரை இந்தியாவுக்கு வெளியில், அதாவது மலேசியா அல்லது இலங்கையில் நடத்துமாறும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தும் என பி.சி.பி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் பரம வைரிகளாகக் கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையில் நீண்டகாலமாக இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படவில்லை. ஏற்கெனவே திட்டமிட்ட தொடர்களில் இந்திய அணி பங்கேற்காததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  பெரிய அளவில் வருமான இழப்பைச் சந்தித்து வருவதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிராக பி.சி.பி. போர்க்கொடி உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.