வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (08/04/2018)

கடைசி தொடர்பு:07:54 (09/04/2018)

`பிரதமருக்கு எதிர்ப்பைக் காட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்!’ - எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் #WeWantCMB

`பிரதமருக்கு எதிர்ப்பைக் காட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்!’ - எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்குக்  கறுப்புக்கொடி காட்ட தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.  

அனைத்துக்கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காவிரி மீட்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இ.யூ முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட அழைப்பு விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமில்லாமல், தீர்ப்பையே புறக்கணித்திருப்பதைக் கண்டித்து பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கறுப்புக்கொடி காட்டுவது என தி.மு.க. தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

அதன் அடிப்படையில் வரும் 12-ம் தேதி தமிழகம் வரவிருக்கும் பிரதமருக்கு அனைத்துக் கட்சியினரும் கறுப்புக் கொடி காட்டுவார்கள். காவிரியில் முறையாகத் தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகி,  பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் மக்களுக்கு குடிநீருக்கும் பிரச்னை உருவாகும் நிலையில் நீதிமன்ற தீர்ப்பைக் கிடப்பில் போட்டுவிட்டு தமிழகம் வருகிறார் பிரதமர். 

இதை தட்டிகேட்க துணிச்சல் இல்லாமல் பதவி ஒன்றே வாழ்க்கை என தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அதிருப்தியையும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் பிரதமருக்கு தெளிவுபட உணர்த்திடும் வண்ணம் தங்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும், கறுப்புச் சட்டை அல்லது கறுப்பு பேட்ஜ் அணிந்து இந்த உரிமை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.