வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (09/04/2018)

கடைசி தொடர்பு:00:00 (09/04/2018)

`கரூர் நகராட்சியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்!

`கரூர் பெருநகராட்சி பகுதியில் சீரான குநீர் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் அழகம்மை மஹாலில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் இனாம் கரூர், கரூர் மற்றும் தாந்தோணி உள்ளடக்கிய பெரு நகராட்சிக்கு, வறட்சி காலத்தை கருத்தில் கொண்டு சீரான குடிநீர் வழங்குவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், ``குடிநீர் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி பகுதியில் நிர்வாக ஒப்புதல் ரூ.24.67 லட்சத்திற்கும், தொழில்நுட்ப ஒப்புதல் ரூ.23.84 லட்சத்திற்கும், இனாம் கரூர் பகுதியில் நிர்வாக ஒப்புதல் ரூ.18.57 லட்சத்திற்கும் மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல் ரூ.20.41 லட்சத்திற்கும், தாந்தோணி பகுதியில் நிர்வாக ஒப்புதல் ரூ.25.16 லட்சத்திற்கும், தொழில்நுட்ப ஒப்புதல் ரூ.25.38 லட்சத்திற்கும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெறவுள்ள தற்போதைய மக்கள் தொகை 134927 (கரூர் நகராட்சி),102000 (இனாம் கரூர்),72,563 (தாந்தோணி) ஆகும். 

வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள குடிநீரின் அளவு நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் ஆகும். இடைக்கால மற்றும் உச்சகட்ட தினசரி குடிநீரின் அளவு முறையே 6.04 மற்றம் 7.77 மில்லியன் லிட்டர் (கரூர் நகராட்சி), 5.367 மற்றும் 9.46 மில்லியன் லிட்டர் (இனாம் கரூர்), 8.87 மற்றும் 11.84 மில்லியன் லிட்டர் (தாந்தோணி) ஆகும். இத்திட்டத்திற்கான பணி முடிக்கப்பட்டு மேல்நிலை தொட்டிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முடிக்கப்பட வேண்டிய மீதமுள்ள பணிகளான மாற்று குடிநீர் இணைப்புகள் மற்றும் பகிர்மான குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இத்திட்டத்தினை ஜூன் 2018-ல் முடித்து முழுமையான மக்கள் பயனுக்கு கொண்டு வர இலக்கிடப்பட்டுள்ளது. இனாம் கரூர் பகுதியில் பணி உத்தரவு வழங்கப்பட்டு இதுவரை 65 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினை அக்டோபர் மாதம் பொது மக்கள் பயனுக்கு கொண்டு வர இலக்கிடப்பட்டுள்ளது. தாந்தோணியில் இத்திட்டத்திற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில்  முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும்  குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.