`காவிரிக்காகத் தனியொருவனாகக் களமிறங்கிய இளைஞர்'! - சித்தன்னவாசலில் நூதன பிரசாரம்! #WeWantCMB

அன்னவாசல் அருகே, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, இளைஞர் ஒருவர் நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலின் முக்கிய இடங்களில், கையில் பதாகைகளுடன் எடிசன் என்ற இளைஞர் ஒருவர் காவிரி, ஸ்டெர்லைட் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினார். பதாகைகளை பிடித்தவாறு சித்தன்னவாசல் முகப்புவாசல், சிறுவர் பூங்கா மற்றும் குளத்தில் படகில் சென்றவாறு தனி ஆளாகக் கோஷமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார். அந்தச் சமயத்தில் அன்னவாசலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அப்போது, 'தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை காண்பதற்கு குடும்பத்துடன் அன்னவாசலுக்கு வருகைதரும் கனடா பிரதமரே வருக...வருக...' என்று மெகா சைஸில் ஃப்ளெக்ஸ் வைத்து அசத்தியவர்தான் இந்த எடிசன். சமூகசேவை, அதுசார்ந்த நிகழ்ச்சிகளை அன்னவாசல் பகுதிகளில் தொடர்ந்து  நடத்திவருபவர். இப்போது காவிரி, ஸ்டெர்லைட் போன்ற விஷயங்களைக் கையில் எடுத்து தனியொருவனாக தன்னால் ஆன எதிர்ப்புக்குரலைப் பதிவுசெய்துவருகிறார். 

இதுகுறித்து அவர் பேசும்போது, " மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இந்தப் போராட்டத்தைப் பண்ணாமல், ஆள்கள் அதிகம் வராத சித்தன்னவாசலை ஏன் தேர்ந்தெடுத்தீங்கன்னு பலரும் என்னிடம் கேக்கிறாங்க. சித்தன்னவாசல் உலகப்புகழ் பெற்ற இடம். சமணர்களின் கலைக்கோயில், தென்னாட்டு அஜந்தா, எல்லோரா போன்று பெயர்பெற்றது. இங்கு, தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அவர்கள் மத்தியில் காவிரி, ஸ்டெர்லைட்,  நியூட்ரினோ விஷயங்களைக் கொண்டுசெல்வதற்காகத்தான் சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் வளாகத்தை நான் தேர்ந்தெடுத்தேன். நிறைய வெளியூர் பயணிகள், தாமாகவே முன்வந்து எனக்குக் கைக்கொடுத்துப் பாராட்டினார்கள்.

இன்னும் சிலர், விஷயத்தோடுதான் போராடுகிறேனா, இல்லை... விளம்பரத்துக்காக இப்படிச் செய்கிறேனா  என்ற சந்தேகத்தோடு, என்னிடம் காவிரி ஆற்றைப்பற்றியும் ஸ்டெர்லைட் பாதிப்புகள் பற்றியும் விசாரித்தார்கள். அவர்களுக்கு நான் விவரமாக அதுபற்றிய விஷயங்களைக் கூறிய பிறகுதான், நான் உண்மையான உணர்வுடன் போராடுகிறேன் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்த்திச் சென்றார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!