வெளியிடப்பட்ட நேரம்: 03:31 (09/04/2018)

கடைசி தொடர்பு:09:25 (09/04/2018)

கர்நாடகத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

225 தொகுதிகளைக்கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் மே 12-ம் தேதி, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 15-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, நேற்று மாலை டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின், 72 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பா.ஜ.க அறிவித்தது. முதல்வர் வேட்பாளராக பி.எஸ்.எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஷிகர்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்தப் பட்டியலில் சசிகலா ஜோலி, ரூபாலி நாய்க் ஆகிய இரு பெண் வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சசிகலா ஜோலி, பெல்காம் மாவட்டத்தில் இருக்கும் அதானி தொகுதியிலும், ரூபாலி நாய்க் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். பெல்லாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீராமுலு, சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள மொல்கல்முரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

தற்போது, கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயன்றுவருகிறது. பா.ஜ.க., இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கப் போராடிவருகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க