`ராமமோகன ராவ் சொல்வது அப்பட்டமான பொய்!' - சீறிய சி.வி.சண்முகம்

``ஜெயலலிதா மரணத்தில் யாரைக் காப்பாற்ற முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் அப்பட்டமான பொய்யைச் சொல்கிறார்? என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.வி.சண்முகம்

“முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க தம்பிதுரை உறுதியாக இருந்தார். அதுகுறித்து ஆலோசித்த நிலையில், சில காரணங்களால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை” என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான பிறகு, தமிழக முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ்   செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில், 2,500 திருமணமான பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “காவிரி விவகாரத்தில் அரசியல்ரீதியான அழுத்தத்தையும், சட்டரீதியான நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. சரித்திரத்திலேயே இல்லாத அளவில், எங்கள் அ.தி.மு.க எம்.பி-க்கள் பாராளுமன்றத்தை முடக்கியிருக்கிறார்கள். அதேபோல, யாருக்கும் பாதிப்பில்லாமல், அறவழிப் போராட்டத்தின்மூலம் மத்திய அரசுக்கு எங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறோம். காவிரி மேலாண்மை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கெடு முடிந்த ஒரு மணி நேரத்துக்குள், மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தோம்.

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. இதுவரை வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதுகுறித்துப் பேசியிருக்கிறார். இவ்வளவு நாள்களாக இவர் என்ன செய்துகொண்டிருந்தார். சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச்செல்வதுகுறித்து யாரிடம் ஆலோசனைசெய்தார்கள்? வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதற்குத் தடை விதித்தது யார்? அதன் பின்னணி என்ன? யாரைக் காப்பாற்ற ராமமோகன ராவ் அப்பட்டமான இந்தப் பொய்யைக் கூறுகிறார்” என்று ஆவேசமாகக் கேள்விகளை எழுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!