வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (09/04/2018)

கடைசி தொடர்பு:10:35 (09/04/2018)

ராணுவக் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி! - பாதுகாப்பு வளையத்தில் சென்னை

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை கிழக்குக் கடற்கரைச் சாலையில், ஏப்ரல் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, வரும் 12-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வரவிருக்கிறார்.

பாதுகாப்பு கண்காட்சி, சென்னை

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தைப் பகுதியில், 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்திய பாதுகாப்புத் துறை சார்பாக 'பாதுகாப்புக் கண்காட்சி 2018' நடைபெற இருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட 42 நாடுகள் இதில் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கின்றன. இந்தியாவை உலகின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி மையமாகக் காட்சிப்படுத்துவதே பாதுகாப்புக் கண்காட்சியின் நோக்கமாகும். இந்தக் கண்காட்சியில், உள்நாட்டுத் தொழிற்சாலைகள் தங்களது உள்நாட்டு உற்பத்தித் தடவாளங்களையும், பகுதிப் பொருள்களையும் காட்சிக்கு வைக்க உள்ளன. இதற்காக, கிழக்குக் கடற்கரைச் சாலை அருகில் 400 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு, ரூ.463 கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரமாண்ட கண்காட்சி அரங்குகள், கடலில் நடக்கும் சாகசங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காக, பார்வையாளர் மாடங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகின்றன. சுமார் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மும்பை, டேராடூன் ஆகிய இடங்களிலிருந்து பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை ராட்சத கன்டெய்னர் லாரிகள்மூலம் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்புப் படையினர், கண்காட்சி வளாகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்திவருகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள்மூலம்  வளாகம் கண்காணிக்கப்படுகிறது.

ஏப்பல் 12-ம் தேதி, பிரதமர் மோடி தமிழகம் வருவதை பிரதமர் அலுவலகம் உறுதிசெய்துள்ளது. டெல்லியிலிருந்து தனி விமானம்மூலம் காலை 9.20-க்கு சென்னை விமான நிலையத்துக்கு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் மாமல்லபுரம் வந்து, அங்கிருந்து திருவிடந்தைக்கு கார்மூலம் செல்கிறார். காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு மதியம் 1 மணிக்கு சென்னை கேன்சர் இன்ஸ்டிட்யூட் வைரவிழாவில் கலந்துகொள்ளும் மோடி, மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்படுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க