மல்லுக்கட்டிய அமைச்சர்கள்! - பதவி இழந்த கிரம்மர் சுரேஷ்

காவிரிய வச்சுக்கோ, அம்மாவை குடு' என்று தன்னுடைய அசத்தலான போஸ்டர்களால் 

கிரம்மர் சுரேஷ்

'காவிரிய வச்சுக்கோ, அம்மாவைக் குடு' என்று தன்னுடைய அசத்தலான போஸ்டர்களால் தமிழகத்தையே திரும்பிப்பார்க்கவைத்தவர், மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ். அப்படிப்பட்டவரை, இரண்டு அமைச்சர்களின் மோதலினால், கொடுக்கப்பட்ட பதவியை ஒரே நாளில் பிடுங்கி, அவரைப் பரிதாபமாகப் பார்க்கவைத்துவிட்டார்கள். 

பி.டி.ஆரின் ஆதரவாளராக தி.மு.க-வில் வலம் வந்த கிரம்மர் சுரேஷ், பின்பு அ.தி.மு.க-வில் சேர்ந்து வித்தியாசமான போஸ்டர்களால் ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றார். பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்த அவர், அ.தி.மு.க-விலிருந்த உள்குத்துகளால் பெரிய பொறுப்புக்கு வரமுடியவில்லை. ஆனாலும், போஸ்டர் போடும் பணியைத் தொடர்ந்து செய்துவந்தார். 

சமீபகாலமாக, செல்லூர்ராஜுவின் தீவிர ஆதரவாளராக மாறினார். செல்லூர்ராஜுவின் பேரன்களின் காதணி விழாவுக்கு, மதுரையே திணறத்திணற விளம்பரம்செய்தார். அதற்குப் பிரதிஉபகாரமாக, ஜெயலலிதா பேரவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை தலைமைக் கழகத்திலிருந்து கிரம்மர் சுரேஷுக்கு நேற்று அறிவிக்கவைத்தார் செல்லூர் ராஜு.

அமைச்சர்களின் சண்டையால்

இதைப் பெரிய விழா எடுத்துக் கொண்டாட, கிரம்மர் தரப்பினர் தயாராகிவந்தனர். இந்த நிலையில், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளராக இருக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவருடைய ஆதரவாளரைக் கொண்டுவர நினைத்திருந்தாராம். ஆனால் செல்லூர் ராஜு,  கிரம்மர் சுரேஷை முன்னிறுத்தியதில் அதிருப்தி அடைந்துள்ளார் உதயகுமார். இதையடுத்து, ஆர்.பி.உதயகுமார்  தரப்பு  எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் இதுகுறித்துப் புகார் கூறியுள்ளனர். நேற்று காலை செல்லூர்ராஜுவுக்கும், ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ-க்கள் ராஜன்செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான்,  கிரம்மர் சுரேஷுக்கு அளிக்கப்பட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பதவி ஒரேநாளில்  பறிக்கப்பட்டதாக தலைமைக் கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. `இரண்டு அமைச்சர்களுக்கிடையே ஆன மோதலில் கிரம்மரை பலகிடாவாக்கியுள்ளனர்’ என்று வருந்துகிறது அ.தி.மு.க வட்டாரம். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!